அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் கட்சிக்கொடி, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, ஓபிஎஸ் தரப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ்ஸுக்குத் தரப்பட்ட தண்டனையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது, அதிமுக தரப்பு.
ஓ. பன்னீர்செல்வத்திற்கு எதிராக வெளியான தீர்ப்பை முன்னிட்டு ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஓபிஎஸ்ஸின் நம்பிக்கை துரோகத்திற்கு நீதிமன்றம் மூலமாக கிடைத்த தண்டனை என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது:
எங்க:ள் கட்சியின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள். கட்சிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யும் வகையில் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் அவர்.
தன்னுடைய ஆதரவாளர்கள் என்னும் பெயரில் அடியாட்கள் மற்றும் குண்டர்களோடு சென்று அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி, கொள்ளையடித்துச் சென்றவர், இன்று கட்சிக்கொடியை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை முழு மனதோடு வரவேற்கிறோம்.
குழம்பிய குட்டையில் ஓபிஎஸ் மீன்பிடிக்க நினைக்கிறார். அது என்றும் நடக்காது. அதிமுக தொண்டர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய நினைக்கும் ஓபிஎஸ்ஸுக்கு ஆண்டவனே தக்கத் தண்டனையை வழங்கியுள்ளார் என்றார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் தரப்பு கருத்து கூற மறுத்திருக்கிறது. பாஜகவுடனான கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நாள் தொடங்கி ஓபிஎஸ் தரப்பு உற்சாகமாக இருந்து வந்தது. எப்போதுமில்லாமல் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகவே தாக்கிப் பேசியிருந்தார். எடப்பாடி, திகார் சிறைக்கு செல்லும் நாள் நெருங்கிவிட்டதாக அவர் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் பதிலடி தந்திருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் நடைபெற்ற விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜகவின் தலைமையேற்று கூட்டணியில் சேர்வதற்குத் தயாராக இருப்பதாகவும், மீண்டும் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமராகத் தொடரவேண்டும் என்று ஓபிஎஸ் வெளிப்படையாக பேசியிருந்தார்.
தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றம் என அனைத்துக் கதவுகளும் மூடிவிட்ட நிலையில் இனி ஓபிஎஸ் என்ன முடிவெடுப்பார் என்பதே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியிருக்கிறது. ஏற்கெனவே அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்த நிலையில் அதே கட்சியில் முறைப்படி இணைவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதே நேரத்தில் அமமுகவில் இணைவதன் மூலமாக தினகரனின் தலைமையின் கீழ் பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதால் நேரடியாக பாஜகவில் இணைந்துவிடவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதிமுக இல்லாத ஓர் அணியைக் கட்டமைப்பது என்று பாஜக முடிவெடுத்தால், அதில் ஓபிஎஸ் முக்கியப் பங்கு வகிப்பார் என்பது தெரிகிறது. அதிமுக இல்லாத பாஜக கூட்டணியில் சேர்வதற்கு ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக கூட்டணியில் முதல் ஆளாக ஓபிஎஸ் இணைந்தால் கூட்டணிக்குப் பலம் சேர்க்கும் என்று கமலாலய வட்டாரம் நம்புகிறது.