https://x.com/UpdatesChennai
தமிழ்நாடு

புதிதாக அமையவுள்ள சென்னை சென்ட்ரல் ஸ்கொயர் டவர்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

12 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில், வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய 27 மாடி கோபுரத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளோம்.

ராம் அப்பண்ணசாமி

நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர், மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கம், பிரசெல்ஸில் உள்ள கிராண்ட் பிளேஸ் ஆகியவற்றைப் போல, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னையில் சென்ட்ரல் ஸ்கோயர் டவர் உருவாக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார் சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன்.

சென்னையில் அமையவுள்ள சென்ட்ரல் ஸ்கொயர் டவர் குறித்து, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு,

`வெளிநாடுகளில் பார்த்தோமேயானால் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர், மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கம், பிரசெல்ஸில் உள்ள கிராண்ட் பிளேஸ் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், பொதுமக்கள் தங்களது நேரத்தைச் செலவிடும் வகையிலும், கலாச்சார நிகழ்வில் நடைபெறும் வகையிலும் மேம்படுத்தப்பட்டு உபயோகத்தில் உள்ளன.

தமிழகத்தில் அதுபோன்ற இடத்தை உருவாக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தேர்ந்தெடுத்தோம். அங்கே தேவையான இடம் இருந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளியே பூங்கா, சுரங்கப்பாதை, நடைபாதைகள், பொதுவெளி நாற்காலிகள் ஆகியவற்றை உருவாக்கினோம். அவற்றை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அதைத் தவிர பொதுமக்கள் கூடும் வகையில், பொதுப் பயன்பாட்டிற்காக ஒரு கோபுரத்தை உருவாக்க திட்டமிட்டோம். 2018-ல் இதைத் திட்டமிட்டு, இதன் ஒரு பகுதியாக 600 நான்கு சக்கர வாகனங்களும், 1600 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 29 மீட்டர் உயரத்தில் அங்கே அடித்தள வாகன நிறுத்துமிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. இதை வெளியே இருந்து பார்க்கும்போது தெரியாது.

இந்த வாகன நிறுத்துமிடத்திற்கு மேலே 12 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில், 27 மாடியுடன் கூடிய கோபுரத்தை திட்டமிட்டுள்ளோம். இதில் ஹோட்டல்கள், வணிக அங்காடிகள், திரையரங்கங்கள் உள்ளிட்டவை அமையவுள்ளன. வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு மட்டும் ரூ. 196 கோடியை செலவிட்டுள்ளோம். அதற்கு மேலே கட்டப்படவுள்ள கோபுரத்திற்கு ரூ. 360 முதல் ரூ. 370 கோடி செலவிடப்படவுள்ளது.

இந்தக் கட்டுமானத்தை மேற்கொள்ளும் வகையில், சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு அடுத்த ஒரு வாரத்தில் ஒப்பந்தத்தை வழங்கவிருக்கிறோம். ஏற்கனவே அந்தப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா ஹால், ரிப்பன் மாளிகை ஆகியவை உள்ளன. ரயில் நிலையம், பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் ஆகிய அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளும் அங்கே உள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும், டிட்கோ நிறுவனமும் இணைந்து கூட்டாக இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு இதனால் வருமானம் கிடைக்கும். 30 மாதத்திற்குள் இதைக் கட்டி முடிக்க அவகாசம் வழங்கப்படும்.