தமிழ்நாடு

தலைமையாசிரியரை இடைநீக்கம் செய்தால் சாலையில் மறியல் செய்வோம்: கவுன்சிலர் உமா ஆனந்தன்

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராகப் பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது

ராம் அப்பண்ணசாமி

அசோக் நகர் பள்ளியில் நடந்த சொற்பொழிவு சர்ச்சையை முன்வைத்து, `சொற்பொழிவு நிகழ்ச்சியை அனுமதித்த தலைமையாசிரியரை இடைநீக்கம் செய்ய விடமாட்டோம். சாலையில் நின்று மறியல் போராட்டம் செய்வோம்’ என்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் சென்னை பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியவை பின்வருமாறு:

`இன்று காலையில்தான் அந்தக் காணொளியை நான் பார்த்தேன். எனக்குத் தெரிந்த ஒருவர் இன்று காலை அந்தப் பள்ளிக்கு அருகே சென்றபோது அங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர், ஊடகத்தினரும் இருந்தனர். அது குறித்து அவர் விசாரித்தபோது, இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் அவர் விசாரித்தபோது, முன்பு அங்கே ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளர் பேசியுள்ளார், அதற்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் புகார் அளித்திருப்பார் என்று நான் விளக்கத்தேவையில்லை. தன்னம்பிக்கைப் பேச்சாளரை இவர்களாகத்தான் அழைத்துள்ளனர். அவராக வரவில்லை.

பள்ளி மாணவர்களிடையே மாண்புகள் குறைந்துவிட்டன, சாதிப் பிரச்னைகள் ஏற்படுகின்றன என்றுதான் நீதிபதி சந்துரு குழு அமைக்கப்பட்டது. மாண்புகளை பள்ளி மாணவர்களிடையே புகுத்த பல்வேறு வழிகள் இருக்கின்றன. அந்த விதத்தில்தான் அந்தப் பேச்சாளர் திருக்குறளை மேற்கோள்காட்டி இம்மை மறுமை குறித்துப் பேசியுள்ளார்.

அப்படி என்றால் திருக்குறளையும், அவ்வையாரையும் பாடத்திட்டத்திலிருந்து தமிழக அரசு நீக்கிவிடுமா? ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராகப் பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. சொற்பொழிவு நிகழ்ச்சியை அனுமதித்த தலைமையாசிரியரை இடைநீக்கம் செய்ய விடமாட்டோம். சாலையில் நின்று மறியல் செய்வோம்’ என்றார்.