படம்: https://x.com/NtkMadurai
தமிழ்நாடு

நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம்: இளம்பெண் விளக்கம்! | Honour Killing

"என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்குத் தெரியாது."

கிழக்கு நியூஸ்

தானும் கவினும் உண்மையாகக் காதலித்ததாக சம்பந்தப்பட்ட இளம்பெண் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், தனது பெற்றோருக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக, இரு காணொளிகளை அவர் வெளியிட்டுள்ளார்.

முதல் காணொளியில் அவர் கூறியதாவது:

"நானும் கவினும் உண்மையாகக் காதலித்தோம். செட்டில் ஆகக் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. மே 30 அன்று சுர்ஜித்தும் கவினும் பேசிக்கொண்டார்கள்.

அந்த நேரத்தில் அப்பாவிடம் சுர்ஜித் கூறிவிட்டான். காதலிக்கிறாயா என்று அப்பா என்னிடம் கேட்டபோது, நான் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டேன்.

6 மாதங்கள் கழித்து கூறச் சொல்லி கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். அதனால், அப்பாவிடம் அன்று நான் சொல்லவில்லை. அடுத்த ஒரு மாதத்தில் இப்படி நடந்துவிட்டது. இருவருக்கு இடையே என்ன உரையாடல் நடந்தது என்பது தெளிவாகத் தெரியாது.

ஆனால், கவினை ஃபோனில் அழைத்து பெண் கேட்டு வருமாறு சுர்ஜித் கூறியிருக்கிறார். இவருடைய திருமணத்தை முடித்தால் தான் அடுத்து என் வேலையை நான் பார்க்க முடியும் என்று சுர்ஜித் கவினிடம் கூறியது எனக்கு நன்றாகவே தெரியும்.

இதற்கடுத்து, கடந்த 27 அன்று கவின் வருவது எனக்குத் தெரியாது. ஜூலை 28 அன்று மாலை தான் நான் வரச் சொல்லியிருந்தேன்.

மருத்துவமனையில் அறை இருப்பதைப் பார்த்து, கவினின் தாத்தாவை அனுமதிக்க வேண்டும் என்று யோசித்திருந்தேன்.

ஆனால், ஜூலை 27 அன்று பிற்பகலில் அவர்கள் வந்தபிறகு தான், அவர்கள் வந்ததே எனக்குத் தெரியும். எனவே, அவர்களை நேரடியாக நான் உள்நோயாளிப் பிரிவுக்கு அழைத்துச் சென்றுவிட்டேன்.

கவின் உள்ளேன் வந்தான். ஆனால், கவினின் அம்மா மற்றும் மாமாவிடம் மட்டும் தான் நான் பேசிக் கொண்டிருந்தேன். பேசிக்கொண்டிருந்தபோதே, கவின் வெளியே சென்றுவிட்டான்.

கவினின் அம்மா மற்றும் மாமா அங்கிருந்து கிளம்புபோது தான் கவின் எங்கே என்பதை யோசித்தோம். நான் சிகிச்சை முறை குறித்து விளக்கிக் கொண்டிருந்தேன். கவினின் தாயார் மற்றும் நான் கவினை அழைத்தோம். ஃபோனை எடுக்கவில்லை.

அவர்கள் பசிக்கிறது என்று கூறியதால், நீங்கள் சாப்பிடச் செல்லுங்கள் கவினை வரச் சொல்கிறேன் என்று கூறியிருந்தேன். அதற்குள் இதெல்லாம் நடந்துவிட்டது.

தேவையில்லாமல் இதுகுறித்து நிறைய வதந்திகளைக் கிளப்ப வேண்டாம். உங்களுக்குத் தோன்றுவதையெல்லாம் பேச வேண்டாம். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்குத் தெரியாது. இதை இத்துடன் விட்டுவிடுங்கள். அவ்வளவு தான்" என்று அவர் கூறியுள்ளார்.

மற்றொரு காணொளியில் அவர் கூறியதாவது:

"எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்பது எனக்கும் அவனுக்கும் மட்டும்தான் தெரியும். எங்களுடைய உறவைப் பற்றியோ எங்களைப் பற்றியோ யாரும் இனி தவறாகப் பேச பேச வேண்டாம். யாருக்கும் எதுவும் தெரியாது. உண்மை என்னவென்று தெரியாமல், எல்லோரும் நிறைய பேச வேண்டாம். எங்க அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. அவர்களை விட்டுவிடுங்கள். இத்தகைய சூழலில் எல்லோரும் என்னென்ன தோன்றியதோ அவை அனைத்தையும் பேசிவிட்டீர்கள். என் உணர்வுகள் என்ன? நான் என்ன நினைக்கிறேன்? என்பதற்கு மதிப்பளித்து Sri's loud_speaker00 எனும் பக்கத்தில் ஒரேயொரு பெண் மட்டும் என்னைப் பற்றி பேசியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

விவரம்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் கவின். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் கேடிசி நகர் அருகே தனியார் கிளினிக்கில் பணிபுரிந்து வருகிறார் சம்பந்தப்பட்ட இளம்பெண்.

இருவரும் ஒன்றாகப் படித்துள்ளார்கள். 10 வருடங்களாக இருவருக்கும் பழக்கம்.

இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பெண்ணின் இளைய சகோதரர் சுர்ஜித் கடந்த ஞாயிறன்று கவினைத் தனியாக அழைத்துச் சென்று ஆணவப் படுகொலையைச் செய்துள்ளார். சுர்ஜித் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களாக உள்ள அவருடைய பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குண்டர் தடுப்புச் சட்டமும் சுர்ஜித் மீது பாய்ந்தது.

காவல் உதவி ஆய்வாளர்களாக உள்ள சுர்ஜித்தின் பெற்றோர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுர்ஜித்தின் பெற்றோர்களும் கைது செய்யப்பட்டால் மட்டுமே கவினின் உடலை பெற்றுக்கொள்வோம் என கவினின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே, சுர்ஜித்தின் தந்தை நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இருந்தபோதிலும், சுர்ஜித்தின் தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என போராட்டம் தொடர்கிறது.

Honour Killing | Nellai Honour Killing | Surjith