ANI
தமிழ்நாடு

இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம்: ஜெய்சங்கர்

இந்த விவகாரத்தின் பின்னணி 1974-ல் அன்றைய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏற்பட்ட புரிதலில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்

ராம் அப்பண்ணசாமி

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

`ஜூன் 26 நிலவரப்படி 34 இந்திய மீனவர்கள் இலங்கைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இது போக 6 மீனவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, அங்குள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜாஃப்னாவில் உள்ள துணைத் தூதரகம் மூலம் அவர்களைச் சீக்கிரமாக விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தின் பின்னணி 1974-ல் அன்றைய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஏற்பட்ட புரிதலில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014-ல் ஆட்சிக்கு வந்தபிறகு, மீனவ சமூதாயத்தின் வாழ்வாதார நலன்களில் கவனம் செலுத்தி வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தை ஈடுபடுத்துவது உட்பட, இந்த முயற்சிகள் பல்வேறு பரிமாணங்களில் தொடர்கின்றன. மேலும், இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கும், நலன்களுக்கும் அதிக முன்னுரிமை நாங்கள் கொடுத்திருக்கிறோம், கொடுப்போம் என உறுதி அளிக்கிறோம்’.

கடந்த ஜூன் 19-ல், `இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு’ மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.