தமிழ்நாடு

எந்த ஜென்மத்து பாவமோ இங்கே மாட்டிக்கொண்டோம்: நாதக மண்டல ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு

எங்களுக்கென என்ன மதிப்பு உள்ளது. கூலிக்கு வேலை செய்வதுபோலத்தான் 14 வருடங்கள் வேலை பார்த்தோம். கட்சி குறித்து ஒரு நாளாவது அழைத்து எங்களிடம் கேட்டிருக்கிறீர்களா?

ராம் அப்பண்ணசாமி

எந்த ஜென்மத்துப் பாவமோ தெரியவில்லை உங்களிடம் வந்து மாட்டிக்கொண்டு எங்கள் வாழ்க்கையின் 14 வருடங்களை இழந்துவிட்டோம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டிப் பேட்டியளித்துள்ளார் கிருஷ்ணகிரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்.

கிருஷ்ணகிரி பிரஸ் கிளப்பில் இன்று (அக்.1) செய்தியாளர்களைச் சந்தித்து பிரபாகரன் பேசியவை பின்வருமாறு:

`இழப்புகளையும், பிரச்னைகளையும் தாங்கி நிற்கிறோம். தமிழர் தமிழர் என்று பேசுகிறீர்கள். மதுரை, திருச்சி அல்லது பிற பகுதிகளில் முழு தமிழர்கள் இருப்பார்கள். ஆனால் என் மாவட்ட மண் அப்படியல்ல. கன்னட, தெலுங்கு மக்கள் இங்கு வேலை பார்க்கின்றனர். கட்சியில் எங்களைப் போல அதே ஈடுபாட்டுடன் அவர்களும் வேலை பார்க்கின்றனர்.

நான் அவர்களை எப்படி நிராகரிக்க முடியும்? கொள்கைரீதியாக இவற்றையெல்லாம் மாற்றவேண்டும். கட்சியின் செயற்குழு கூட்டத்தில், காருக்கு முன் இப்படிச் செல்லவேண்டும், உணவருந்தும்போது யாரும் இருக்கக்கூடாது என்றெல்லாம் பேசப்படுகிறது. இதைத்தான் செயற்குழு கூட்டத்தில் பேசுவார்களா?

பொதுக்குழு கூட்டத்துக்கு அழைக்கிறீர்கள். நீங்களே பேசிவிட்டு, செல்லும்போது கையெழுத்து வாங்கிவிடுகிறீர்கள். செயற்குழு கூட்டத்திலும் அதேபோல கையெழுத்து வாங்கிவிடுகிறீர்கள். எங்களுக்கென என்ன மதிப்பு உள்ளது? கூலிக்கு வேலை செய்வதுபோலத்தான் 14 வருடங்கள் வேலை பார்த்தோம். கட்சி குறித்து ஒரு நாளாவது அழைத்து எங்களிடம் கேட்டிருக்கிறீர்களா?

யாராவது புகார் கூறினால், திட்டுவதற்கு மட்டும் தவறாமல் அழைப்பு வந்துவிடும். யாராவது உங்களை எதிர்த்துப் பேசினால் அவனுக்கு எதிராக நான்கு, ஐந்து நபர்களை நீங்களே உருவாக்குகிறீர்கள். ஒரு மண்டல நிர்வாகியின் மனைவி ஏரி வேலைக்குத்தான் செல்கிறார். மூன்று நபர்கள் இருக்கும் உங்கள் வீட்டில் வேலைக்கு மட்டும் 15 பேர் வேலை பார்க்கின்றனர்.

எங்களை மீண்டும் கட்சியில் நீங்கள் இணைத்துக் கொண்டாலும், இணைத்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. எந்த ஜென்மத்து பாவமோ தெரியவில்லை உங்களிடம் வந்து மாட்டிக்கொண்டு எங்கள் வாழ்க்கையின் 14 வருடங்களை இழந்துவிட்டோம். வேறு யாரும் உங்களின் இளமையை அழித்துவிடாதீர்கள்.

கட்சியை விட்டு விலகி இருக்கும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகளை இணைத்து வரும் நவம்பர் 27-க்குள் புதிய தமிழ் தேசிய இயக்கத்தைத் தொடங்குவதா அல்லது தற்போது இருக்கும் ஏதாவது தமிழ் தேசிய இயக்கத்தில் சேருவதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.