எங்களைப் பொறுத்தவரையில் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இன்றுவரை நீடிக்கின்றோம் என்று அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இன்று (மே 15) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது,
`அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு அமைப்புரீதியாக 88 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள நாம், எந்த மாதிரியான முடிவை எடுத்தால் இந்த இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆர். மற்றும் வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோருக்கு நற்பெயர் கிடைக்கும் என்பதை கவனத்தில்கொண்டு, கருத்துகளைக் கேட்டு பதிவுசெய்திருக்கிறோம்.
தமிழகத்தில் எந்த மாதிரியான அரசியல் சூழல் இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டோம். அந்த கூட்டணியில்தான் இன்றுவரை நீடிக்கின்றோம் என்பதே எங்கள் நிலைப்பாடு.
இரட்டை இலை சின்னத்தைப் பொறுத்தவரையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் (இபிஎஸ் தரப்பிற்கு) தற்காலிகமாகவே வழங்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தல் வரை அந்த நிலைப்பாடுதான் தொடர்கிறது. அதனால்தான் ராமநாதபுரத்தில் நான் சுயேட்சை சின்னத்தில் நின்றேன்.
என்னைத் தோற்கடிக்க மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி சூது எல்லாம் உங்களுக்குத் தெரியும். இதையெல்லாம் மீறிதான் 3.42 லட்சம் ஓட்டுகள் பெற்றேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் நீடிப்பதை யார் விரும்புகிறார்கள், விரும்பவில்லை என்பது குறித்தெல்லாம் கவலைப்படவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (கடந்த மாதம்) சென்னைக்கு வந்திருந்தார். எங்களை அவர் அழைக்காதது வருத்தமளிப்பதாகவே இருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நாங்கள் நீடிக்கிறோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது’ என்றார்.