மாற்று சக்தி நாம் அல்ல முதன்மை சக்தி என்பதை உணர்த்துவோம் என்று குறிப்பிட்டு மதுரை மாநாடு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் வரும் ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தவெக தொண்டர்களுக்கு விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது,
`நம்முடைய அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி வருகிறோம்... இடையில் எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாவற்றையும் மக்கள் சக்தியுடன், அதாவது உங்கள் ஆதரவால் கடவுளின் அருளால் கடந்து வந்துகொண்டே இருக்கிறோம்...
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு நாம் முழு வீச்சில் தயாராகிக்கொண்டு வருகிறோம்... இந்தச் சூழலில் நமது இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம் நடத்த இருப்பது உங்களில் அனைவருக்கும் தெரிஞ்சதுதான்...
முத்தமிழையும் சங்கம் வைத்து வளர்த்த மதுரையில், நம் கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்று, ஜனநாயகப் போரில் அவர்களை வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நமது குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதுதான் இந்த மாநாடு...
அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்தை முன் வைத்து நடக்க இருக்கிறது என்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி...
மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்’ என்றார்.