முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் நீரைத் திறந்துவிட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
சேலம் கந்தம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியவை பின்வருமாறு,
`நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி 1.68 லட்சம் கன அடி நீர் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஆற்று ஓரத்தில் வசித்து வந்த அந்த மக்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் கொடுக்காமல் நீரைத் திறந்துவிட்டுள்ளனர். இதனால் ஆற்று ஓரத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் தென்பெண்ணை ஆற்றின் கரை உடைந்து விழுப்புரம் நகரத்தை நீர் சூழ்ந்திருக்கிறது. முன்னெச்சரிக்கையோடு செயல்படாத ஒரு திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆளும் காரணத்தால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்’ என்றார்.
இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு,
`ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 119.0 அடியில் 110 அடியை அக்.25-ல் எட்டியதை தொடர்ந்து சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளரால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சாத்தனூர் அணையின் வெள்ளப்பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளின்படி 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. நீர் வெளியேற்றப்படும் போது கரைகளில் உள்ள கொளமாஜனூர், திருவாதனூர், புதூர் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்களை சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் குறிப்பிட்டு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தார்.
வெள்ளம் வெளியேறிய போது அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாதைகள் மீது வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது எச்சரிக்கைகளையும் செய்து வந்தார்.
பெரு மழையால் சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது. அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் பொருட்சேதங்களையும், உயிர்சேதங்களையும் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
அப்படியான ஆபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் பெரிய அளவில் பாதிப்புகளோ உயிர் இழப்புகளோ ஏற்படாமல் அரசு மக்களைப் பாதுகாத்தது. அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள்’ என்றார்.