ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இளையராஜா அவமதிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டிற்கு, விளக்கம் அளித்துள்ளது கோயில் நிர்வாகம்.
திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியில் பங்கேற்பதற்காக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்றார் இசையமைப்பாளர் இளையராஜா. அங்குள்ள ஆடித் திருப்பூரப் பந்தலில், இளையராஜா இசையமைத்துப் பாடிய திவ்ய பாசுர இசைக் கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இதைத் அருகிலிருந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்காகச் சென்றார் இளையராஜா. கோயிலில் அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயரும், ஆண்டாள் கோயிலில் அமைந்துள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயரும் உடனிருந்தனர்.
இதன்பிறகு, கோயில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களும், பட்டர்களும் சென்றபோது, அவர்களை தொடர்ந்து இளையராஜாவும் உள்ளே செல்ல முயன்றார். இதைக் கண்ட பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர். அதன்பிறகு, வெளியே நின்றபடி வழிபாடு செய்தார் இளையராஜா. இதைத் தொடர்ந்து அவருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது.
அர்த்த மண்டபத்துக்குள் இளையராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், `அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக வைக்கப்பட்டிருப்பதால், ஜீயர்கள், பட்டர்கள் தவிர அங்கே வேறு யாருக்கும் அனுமதி கிடையாது’ என்றார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (மதுரை) செல்லத்துரை, அனுப்பியுள்ள கடிதத்தில்,
`இந்த திருக்கோயில் மரபுப்படியும், பழக்க வழக்கப்படியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயில் அர்ச்சகர், பரிசாகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கம் இல்லை என செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
டிச.15 அன்று இசையமைப்பாளர் இளையராஜா, சின்ன ராமானுஜ ஜீயர் உடன் வந்தபோது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறினார். அப்போது உடனிருந்த ஜீயர் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறினர். அவரும் அதை ஒப்புக்கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார்’ என்றார்.