கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

வி.கே. சசிகலா இன்று முதல் சுற்றுப்பயணம்

கிழக்கு நியூஸ்

வி.கே. சசிகலா தென்காசியில் இன்று முதல் 4 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் கடந்த மாதம் ஆதரவாளர்களைச் சந்தித்த வி.கே. சசிகலா செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசியலில் தான் மீண்டும் நுழைந்துவிட்டதாகவும், விரைவில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்தார்.

இதனிடையே ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வி.கே. சசிகலா உள்பட அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கட்சிக்குள் குரல் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இன்னொரு புறம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் சசிகலாவைக் கட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தென்காசியில் 4 நாள்கள் தங்கி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் சசிகலா. இந்தப் பயணம் இன்று தொடங்குகிறது. இந்தப் பயணத்தின் மூலம் ஏராளமான தொண்டர்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.