நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், திமுகவை சரமாரியாக விமர்சனம் செய்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களைச் சந்திக்கும் பிரசாரங்களை செப்டம்பர் 14 முதல் மேற்கொண்டு வருகிறார். முதலில் திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். நேரமின்மை காரணமாக பெரம்பலூரில் பிரசாரம் செய்ய முடியாமல் போனது. சனிக்கிழமைகள் தோறும் மக்களைச் சந்திக்கும் விஜய், இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த விஜய், அங்கிருந்து கார் மற்றும் பிரசார வாகனம் மூலம் நாகப்பட்டினத்தைச் சென்றடைந்தார். நாகப்பட்டினத்தில் காவல் துறை அனுமதித்த நேரத்தைக் கடந்த பிறகே, அனுமதி வழங்கப்பட்ட அண்ணா சிலை சந்திப்பை வந்தடைந்தார் விஜய்.
பிரசாரம் நடைபெறும் இடத்தை நெருங்க நெருங்க வாகனத்தின் வேகம் குறைந்தது. தொண்டர்களின் படை சூழ்ந்தது.
பகல் 1.30 மணியளவில் பிரசார வாகனத்தின் மீது ஏறி தொண்டர்களிடத்தில் தலையைக் காட்டினார் விஜய். விஜயைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தார்கள்.
பின்னர் அவர் பேசியதாவது -
"என்றும் ஒரு மீனவ நண்பனாக இருக்கும் விஜயின் அன்பு வணக்கங்கள்... இப்போது நான் நின்று கொண்டிருக்கும் மண், நாகை ஆண்டவர் அன்புடன், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கன்னி ஆசியுடன், கடல் தாயின் மடியில் இருக்கும் என் நெஞ்சுக்கு நெருக்கமான நாகை மண்ணில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் உழைப்பவர்கள் இருப்பதுதான் நாகை மாவட்டம். மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழும் உங்களுக்கு என் சிறப்பு வணக்கம்.
தமிழ்நாட்டில் மீன் ஏற்றுமதியில் 2வது இடத்தில் இருப்பது நாகை துறைமுகம். ஆனால், நவீன வசதிகளுடன் மீனைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் நாகையில் இல்லை. அதி நவீன வசதிகளுடன் வீடுகள் இல்லாத குடிசை வீடுகள் அதிகம் இருப்பதும் நாகைதான். ஆட்சிதான் சாட்சி என்று அடுக்கு மொழியில் பேசிப் பேசியதைக் கேட்டு காதில் ரத்தம் வந்தது தான் மிச்சம். இவர்கள் ஆண்டது பற்றாதா?
இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதையும் அதற்கான காரணங்களையும் தீர்வையும் மதுரை மாநாட்டில் நான் பேசியிருந்தேன். மீனவர்கள் பிரச்னைக்காக குரல் கொடுப்பது என் உரிமை, என் கடமை. இதே நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்பே நாம் பொதுக்கூட்டம் போட்டிருக்கிறோம். விஜய் களத்திற்கு வருவது புதிதல்ல. முன்பு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நின்றோம். இது தவெகவின் பெயரில் நிற்கிறோம். இது புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.
ஈழத்தமிழர்கள் இலங்கையில் இருந்தாலும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனைப் பிரிந்து நிற்பவர்களுக்காக உடனிருக்க வேண்டியது என் கடமை.
மீனவர் பிரச்னையைப் பார்த்து கடிதம் மட்டும் எழுதிவிட்டு மௌனமாக இருக்க நாங்கள் என்ன கபட நாடக திமுகவா?
இல்லை, மற்ற மீனவர் என்றால் இந்திய மீனவர் என்றும், நமது மீனவர்களை மட்டும் தமிழக மீனவர்கள் என்று பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜகாவா?
இங்கிருக்கும் மண் வளத்தைப் பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீனவர்களின் வாழ்வாதாரமும் விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் இருக்கும். கடலோர கிராமங்களை மீன் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் அலையாத்தி காடுகள் அழிவதைத் தடுத்து நிறுத்தி அதற்கு வழி செய்ய வேண்டிய அரசுக்கு அதைவிட முக்கியமான வேலை இருக்கிறது. அது என்ன தெரியுமா? சொந்தக் குடும்பத்துடைய வளர்ச்சியும் சுயநலமும். இங்கிருக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்களுக்குத் தீர்வாகக் காவிரி தண்ணீரைக் கொண்டு வரலாம். கொண்டு வந்தார்களா? இவ்வளவு பாரம்பரிய கடல் சார்ந்த ஊரில் அரசு கடல் சார் கல்லூரி ஒன்று ஒண்டு வந்திருக்கலாம். கொண்டு வந்தார்களா? ஆனால் ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு பயணம் போய்விட்டு வந்து அத்தனை கோடி முதலீடு, இத்தனை கோடி முதலீடு என்று முதல்வர் சிரித்துக்கொண்டே சொல்வார்.
முதல்வர் அவர்களே மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? உங்கள் குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்குப் போகிறதா? வேளாங்கண்ணி நாகூர் கோடியைக்கரை என்று இங்கிருக்கும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தினால் குறைந்து போய்விடுவீர்களா? வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதி செய்வதற்கு வசதியைச் செய்து கொடுக்கலாம். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர் கூட இல்லையாம். நாகப்பட்டினம் புது பேருந்து நிலையத்தையாவது சுத்தமா, சுகாதாரமாக வைத்துக் கொண்டார்களா? நாகப்பட்டினம் ரயில் நிலைய வேலைகளைச் சீக்கிரமே முடித்து வைக்கலாம், செய்தார்களா? மேலக்கோட்டை வாசல் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை மேம்படுத்தலாம். தஞ்சாவூர் நெடுஞ்சாலை பணி பல ஆண்டுகளாக நடக்கிறது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விவசாயிகள் வேதனை அடைகிறார்கள், அதற்குச் சரியான கிடங்கு அமைத்துக் கொடுக்கலாம். தேர்தலுக்கு முன் திமுகவினர் செய்வோம் செய்வோம் என்று சொன்னார்களே! செய்தார்களா? ஆனால் அனைத்தையும் செய்து முடித்த மாதிரி பெருமையாகப் பேசுவார்கள்.
நாங்கள் போன வாரம் திருச்சிக்கும் அரியலூருக்கும் சென்று மக்களைச் சந்தித்தோம். அப்போது பெரம்பலூருக்குப் போக முடியாமல் போனது. நிறைய விதிமுறைகள், நிபந்தனைகள் இருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு போய்ப் பேச முடியவில்லை. அவர்களுக்கு நான் இங்கே மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் பெரம்பலூருக்கு வருவேன். மக்களைச் சந்திக்கும் சுற்றுப் பயணத்தைத் திட்டமிடும்போது அது என்ன சனிக்கிழமை, சனிக்கிழமை என்று கேட்டார்கள். அது உங்களை நான் பார்க்கும்போது உங்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்க கூடாது. உங்களுக்கு ஓய்விருக்கும் நேரத்தில் தானே உங்களைச் சந்திக்க முடியும். நாம் அரசியலிலும் சிலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா!
ஆனால் அப்படி நாம் நாளைத் தேர்ந்தெடுத்து மக்களைச் சந்திக்க வந்தால் அதற்கு எத்தனைக் கட்டுப்பாடுகள். இந்த இடத்தில் அனுமதி கிடையாது. அந்த இடத்தில் அனுமதி கிடையாது என்கிறார்கள். ஆனால் அதற்கான காரணங்கள் எல்லாமே சொத்தைக் காரணங்கள். இதில் அதிகம் பேசக்கூடாது என்று நிபந்தனை வேறு. நான் பேசுவதே ஐந்து நிமிடங்கள்தான். போன வாரம் அரியலூர் சென்றபோது அந்த ஊரில் மின் தடை. திருச்சியில் பேசியபோது ஸ்பீகர் வயரை அறுத்துவிட்டார்கள். தெரியாமல் கேட்கிறேன், முதல்வர் அவர்களே! ஒரு உதாரணத்திற்குக் கேட்கிறேன். இதே இடத்திற்கு பிரதமரோ, ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, உள்துறை அமைச்சரோ வந்து பேசினால் இப்படிச் செய்வீர்களா? செய்துதான் பாருங்களேன்! அடிப்படையே ஆடிவிடும் அல்லவா! செய்யமாட்டீர்கள். நீங்கள்தான் மறைமுக உறவுக்காரர்கள் தானே.
இது பரவாயில்லை. இதைத் தாண்டி ஒரு நிபந்தனை விதித்தார்கள். வாகனத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். மக்களைப் பார்த்துச் சிரிக்காதே என்றெல்லாம் சொன்னார்கள். இதையெல்லாம் பார்த்தால் எனக்குச் சிரிப்பாக இருக்கிறது. நான் நேரடியாகவே கேட்கிறேன் முதல்வர் அவர்களே, மிரட்டிப் பார்க்கிறீர்களா? அதற்கு இந்த விஜய் ஆள் இல்லை சார். பெயரளவுக்குக் கொள்கையை வைத்துக் கொண்டு குடும்பத்தை வைத்துக் கொள்ளை அடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாய் உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்?
நாங்கள் என்ன கேட்டுவிட்டோம். நெரிசல் இல்லாத இடமாகப் பார்த்து பிரசாரம் செய்ய அனுமதி கேட்டோம். மக்கள் வசதியாக நின்று பார்க்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து நாங்கள் அனுமதி கேட்டால், நீங்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் அனுமதி கொடுக்கிறீர்கள். நான் மக்களைச் சந்திக்கக் கூடாது என்பதுதான் உங்கள் எண்ணமா? ஒரு அரசியல் தலைவராக இல்லை, தமிழ் மண்ணின் சாதாரண மகனாக நான், நம் தமிழ் மக்களின் சொந்தக்காரனாக நான் சந்திக்கப் போனால் என்ன செய்வீர்கள்? அப்போதும் தடை போடுவீர்களா? வேண்டாம் சார். இந்த அடக்குமுறை, அராஜக அரசியல் எல்லாம் வேண்டாம் சார். நாங்கள் தனி ஆள் இல்லை. மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி சார். மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன் சார். மாபெரும் இளைஞன் சக்தியின் இயக்கமாக இருக்கிறோம். முதல்வர் அவர்களே! முடிந்தால் நேர்மையாகத் தேர்தலைச் சந்தியுங்கள். வாருங்கள் நீங்களா நானா எனப் பார்த்து விடலாம். குடும்பத்தை வைத்து தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கும் நீங்களா? தமிழ்நாட்டு மக்களின் வீடுகளின் ஒருவனாக இருக்கும் நானா? இனிமேலும் மக்களைப் பார்க்கத் தடை விதிப்பீர்கள் என்றால் நாம் மக்களிடமே அனுமதி கேட்டுக் கொள்கிறேன். மக்களே நான் உங்களைப் பார்க்க வரக்கூடாதா? உங்களோடு பேசக் கூடாதா? உங்கள் குறைகளை நான் கேட்கக் கூடாதா? உங்களுக்காக நான் குரல் கொடுக்கக் கூடாதா? இப்படி நமக்குத் தடை போடும் திமுக அரசு மறுபடியும் ஆட்சிக்கு வர வேண்டுமா? உங்கள் நல்லதுக்காக உங்கள் தவெக ஆட்சி அமைய வேண்டுமா? சத்தமாகச் சொல்லுங்கள்! முதல்வர் சார், எங்கள் போர் முழக்கம் உங்களைத் தூங்க விடாது"
இவ்வாறு பேசினார்.
TVK Vijay | Tamizhaga Vettri Kazhagam | Vijay Nagapattinam | TVK Vijay Nagapattinam | Vijay |