ANI
தமிழ்நாடு

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் போராட்டம்

பூந்தமல்லியில் உள்ள அரசு புத்தக கட்டுனர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்

ராம் அப்பண்ணசாமி

சென்னை காமராஜர் சாலையில் உள்ள, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 2-வது நாளாக போராடி வருகின்றனர்.

புத்தக கட்டுனர் பயிற்சியை முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது போராட்டம் நடத்தும் மாற்றுத்திறனாளிகளின் பிரதானமான கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு புத்தக கட்டுனர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக அரசு நூலகங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அச்சகங்கள் போன்ற நிறுவனங்களில் தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று இவர்கள் போராடி வருகின்றனர். பூந்தமல்லி அரசு பயிற்சி நிறுவனத்தில் ஆண்டுக்கு 20 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால் 2016-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பயிற்சி பெற்ற புத்தக கட்டுனர் யாருக்கும் அரசு வேலை வழங்கப்படவில்லை.

மேலும் பார்வையற்றோர் பள்ளியில் இயங்கி வந்த மூடப்பட்ட பிரெய்லி அச்சகம் மீண்டும் திறக்க வேண்டும், பார்வையற்றோர் பள்ளியில் இயங்கி வரும் புத்தக கட்டுனர் பயிற்சி மையத்தில் பார்வையற்றோர் இருவருக்கு வேலை வழங்கவேண்டும், பூந்தமல்லி பயிற்சி மையத்தில் அளிக்கப்பட்டு வந்த காயில் சுற்றுதல் மற்றும் பொறுத்துனர் பயிற்சிகளை மீண்டும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.