தமிழ் மொழிக்கான நடப்பாண்டின் சாகித்திய பால புரஸ்கார் விருது ஒற்றைச் சிறகு ஓவியா சிறார் நாவலுக்காக, எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்திய அகாடமியின் நிர்வாக குழு கூட்டம், தலைவர் மாதவ் கௌசிக் தலைமையில் இன்று (ஜூன் 18) தில்லியில் நடைபெற்றது. இதில் 24 மொழிகளுக்கான சாகித்திய பால புரஸ்கார் விருதுப் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அந்த வகையில், தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனால் எழுதப்பட்ட சிறார் நாவலான, `ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்கு சாகித்திய பால புரஸ்கார் அறிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெறும் விழாவில், வெற்றியாளர்களுக்கு செம்பு பட்டையத்துடன், ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதி புத்தகாலயம் பதிக்கப்பகத்தால் கடந்த 2019-ல் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. ஓவியா என்ற பள்ளி மாணவிக்கு ஒற்றைச் சிறகு முளைப்பதை சுற்றி எழுதப்பட்டுள்ள இந்த நூல், குழந்தைகளிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பால புரஸ்கார் விருதுப் பட்டியலிலும் இந்த சிறார் நூல் இடம்பெற்றிருந்தது.
1650 – முன்ன ஒரு காலத்துல, அப்புவின் கதைகள், கடலுக்கு அடியில் மர்மம், மலைப் பூ, ஒரு கத சொல்லுங்க மாமா, பச்சை வைரம், சிம்பாவின் சுற்றுலா, யானையை வென்ற எறும்புகள் ஆகிய 8 தமிழ் சிறார் நூல்கள் நடப்பாண்டு போட்டிக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.