விருதுநகர் கல்குவாரி விபத்து 
தமிழ்நாடு

விருதுநகர் கல்குவாரி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

யோகேஷ் குமார்

விருதுநகர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ. 12 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் நேற்று காலை வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த வெடி விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் குவாரி உரிமையாளர் சேது என்பவரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு உரிமையாளரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குவாரியின் மற்றொரு உரிமையாளரான ராஜ்குமாரை இன்று கைது செய்துள்ளனர்.

கல்குவாரியால் பல சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், அதனால் குவாரியை மூட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ. 12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இந்த வெடி விபத்து குறித்து தனது எக்ஸ் தளத்தில், “விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்” எனப் பதிவிட்டிருந்தார்.