தமிழ்நாடு

வெளியுறவுத் துறைச் செயலராக விக்ரம் மிஸ்ரி நியமனம்

இவர் சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ளார். 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா, சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இவருடையப் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.

கிழக்கு நியூஸ்

இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலராக விக்ரம் மிஸ்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பின் துணை ஆலோசகராக இருக்கும் இவர் புதிய வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்க நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வெளியுறவுத் துறைச் செயலராக உள்ள வினய் குவாத்ராவின் பணிக்காலம் கடந்த மார்ச் மாதம் ஜூலை 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், தேசியப் பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில், தேசியப் பாதுகாப்பின் துணை ஆலோசகராக இருக்கும் விக்ரம் மிஸ்ரி புதிய வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஜூலை 15 முதல் வெளியுறவுத் துறைச் செயலராகப் பொறுப்பேற்கவுள்ளார். 1989-ம் ஆண்டைச் சேர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி விக்ரம் மிஸ்ரி. 1964-ல் ஸ்ரீநகரில் பிறந்தார் மிஸ்ரி.

மூன்று முன்னாள் பிரதமர்களுக்குத் தனிச் செயலராக மிஸ்ரி இருந்துள்ளார். 1997-ல் ஐ.கே. குஜ்ரால், 2012-ல் மன்மோகன் சிங் மற்றும் 2014-ல் நரேந்திர மோடி ஆகியோருக்குத் தனிச் செயலராக இருந்துள்ளார்.

இவர் சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்துள்ளார். 2020-ல் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியா, சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இவருடையப் பங்களிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.

2014-ல் ஸ்பெயினுக்கான இந்தியத் தூதராகவும், 2016-ல் மியான்மருக்கான இந்தியத் தூதராகவும் இருந்துள்ளார். இதுதவிர, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவில் பல்வேறு தூதரகப் பொறுப்புகளை வகித்துள்ளார் விக்ரம் மிஸ்ரி.