தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுக்க நாளை (செப்டம்பர் 13) முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், கட்சித் தொண்டர்களுக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
விஜயின் சுற்றுப்பயணத்துக்கு திருச்சி காவல் துறை தரப்பில் அனுமதி தரப்படவில்லை என செய்திகள் வெளியாகின. பிறகு, சென்னையில் காவல் துறை இயக்குநரை நேரில் சந்தித்து விஜய் சுற்றுப்பயணம் தொடர்பாக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மனு கொடுத்தார்.
பிறகு, திருச்சியில் மரக்கடை பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள விஜய்-க்கு காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது. 23 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
செப்டம்பர் 13-ல் திருச்சியில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், டிசம்பர் 20-ல் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். செப்டம்பர் 13-ல் மட்டும் திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் பிரசாரம் செய்கிறார். திருச்சியைத் தொடர்ந்து பெரம்பலூரிலும் காவல் துறை அனுமதி கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயின் பிரசாரத்துக்கான வாகனத்தில் கொள்கை தலைவர்கள் படம், எம்ஜிஆர் மற்றும் அண்ணா புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், தவெக தொண்டர்களுக்காக விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம். தார்மிகக் கடமையோடு பாதுகாப்பு வழங்குவதை காவல் துறையும் முதல்வரும் உறுதி செய்ய வேண்டும். காவல் துறை அளித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தோழர்கள், மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும்" என பல்வேறு விஷயங்களை வலியுறுத்தியுள்ளார் விஜய்.
விஜயின் அறிக்கை
TVK Vijay | Vijay | Vijay Tour | Tamilaga Vettri Kazhagam |