தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் முதலாம் நினைவு நாளை ஒட்டி, தடையை மீறி தேமுதிகவினர் பேரணி நடத்தினர்.
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச.28-ல் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். இதைத் தொடர்ந்து அரசு மரியாதையுடன் அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி நடைபெறும் குருபூஜையில் பங்கேற்குமாறு, முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தவெக தலைவர் விஜய் என தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் முதலாமாண்டு குருபூஜை நடைபெற்றது. இதை முன்னின்று நடத்திவைத்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
குருபூஜைக்குப் பிறகு விஜயகாந்த் நினைவிடத்தில் இருந்து மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணி நடத்தும் வகையில், கடந்த டிச.5-ல் தேமுதிக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேரணிக்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து வேண்டுமென்றே பேரணிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என தேமுதிகவினர் குற்றஞ்சாட்டினர். இருப்பினும், விஜயகாந்த் நினைவிடத்தில் இருந்து பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன், சுதீஷ் உள்ளிட்டோர் தலைமையில் தேமுதிகவினர் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டனர்.
இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்காக அங்கே காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தாலும், தடையை மீறி பேரணியை நடத்தியதற்காக தேமுதிகவைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை.
விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர் சேகர் பாபு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், `சினிமா துறையில் வாய்ப்புகளை தேடி வந்த பலருக்கும் வாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த். அவரால் வாழ்ந்தவர் பலர். அவரால் வீழ்ந்தவர் யாருமில்லை’ என்றார்.
முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டவை பின்வருமாறு,
`மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்தை நினைவுகூர்கிறேன்’ என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டவை பின்வருமாறு,
`தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்ம பூஷண் கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்’ என்றார்.
மநீம தலைவர் கமல்ஹாசன் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளவை,
`அன்பு நண்பர், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்’ என்றார்.