சென்னையில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி தவெக சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடக் களமிறங்கியுள்ள தவெகவின் தலைவரும் நடிகருமான விஜய், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சனிக்கிழமை தோறும் மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்ய உள்ளதாக அவர் அறிவித்தார். அதன்படி கடந்த செப்டம்பர் 13 அன்று திருச்சி மற்றும் அரியலூரில் பரப்புரை மேற்கொண்டார். குறிப்பாக திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து, பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்ட இடத்திற்கு வாகனம் மூலம் விஜய் செல்ல முயன்றபோது தொண்டர்கள் சூழ்ந்ததால், 8 கி.மீட்டர் தொலைவை 5 மணி நேரம் கடந்து சென்றார். முன்னதாக விஜய்யின் பரப்புரைக்கு 23 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்தது. தொடர்ந்து தமிழகத்தின் வெவ்வேறு நகர்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். அந்த ஊர்களிலும் காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் விஜய் பரப்புரை மேற்கொள்ள தவெக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையகரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெகவினர், “தவெக தலைவர் விஜய் சென்னையில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 27-ல் வடசென்னையிலும், அக்டோபர் 25-ல் தென் சென்னையிலும் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது. மேலும் பிரசாரத்தின்போது மைக் பயன்படுத்தவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வட சென்னை மற்றும் தென் சென்னையில் நான்கைந்து இடங்களுக்கு அனுமதி கோரி மனு கொடுத்துள்ளோம், எந்தப் பகுதியில் விஜய் பரப்புரை செய்வார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்”
இவ்வாறு கூறினர்.
Vijay | TVK Vijay | Vijay Campaign | Vijay Campaign in Chennai | TN Politics |