தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். நெரிசலில் சிக்கிய பலரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கரூரில் தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 36 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 10 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கரூர் பரப்புரையை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார் விஜய். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகள் எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை. பிறகு தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.