நடிகர் விஜய் திருச்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை உண்மையில் பார்க்கவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளர்.
சட்டமன்ற தேர்தலுக்காக முதல் பிரசாரத்தை நேற்று (செப். 13) திருச்சியில் நடத்திய தவெக தலைவரும் நடிகருமான விஜய், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிப் பேசினார். இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "திருச்சியின் வளர்ச்சித் திட்டங்களை விஜய் சரியாகப் பார்க்கவில்லை" என்று கூறினார்.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:
விஜய் பேசியபோது, கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் "கேட்கல, கேட்கல" என்று கத்தியதை நான் பார்த்தேன். ஆனால், நீங்கள் பேசியது மக்களுக்குக் கேட்கவில்லை என்பதைவிட, திருச்சியில் நடந்த வளர்ச்சியை நீங்கள் சரியாகப் பார்க்கவில்லை என்றே நான் சொல்வேன். கடந்த நான்கரை ஆண்டுகளில், எங்களால் என்னென்ன செய்ய முடியுமோ, அதை முறையாகச் செய்திருக்கிறோம். அனைத்தும் செய்துவிட்டோம் என்று சொல்ல நாங்கள் விரும்பவில்லை, இன்னும் அதிகமாகச் செய்ய நாங்கள் ஆசைப்படுகிறோம். அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த அமைச்சருடன் இணைந்து, திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முழுமையாக எங்களுடைய பங்கைச் செலுத்தி வருகிறோம்.
யாராவது அவருக்குச் சரியான தகவல்களைக் கொடுத்திருந்தால், "இந்த மாவட்டத்தில் இதெல்லாம் செய்திருக்கிறார்கள், இதெல்லாம் செய்யவில்லை" என்று அவர் குறிப்பிட்டிருப்பார். ஆனால், ஒட்டுமொத்தமாக எதுவும் செய்யவில்லை, எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று நீங்கள் சொன்னால், அறிவுசார்ந்த மக்கள் அதிகம் வாழும் திருச்சி மாவட்டத்தில் அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் எதையும் பகுத்தறிந்துதான் பார்ப்பார்கள் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வளவு இளைஞர்களை அவர் ஒன்று திரட்டியுள்ளார். இந்த இளைஞர்களுக்கு நாட்டு நடப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் பேசியிருக்கலாம். அரசியல் எதிரிகளைப் பற்றி அவர் பேசியிருக்கலாம். அதே நேரத்தில், ரசிகர்களான இளம் பிள்ளைகளின் கல்விக்கான பணத்தை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருக்கிறது, 'ஏன் விடுவிக்கவில்லை' என்று அவர் கேட்டிருக்கலாம். இப்படி நாட்டு நடப்பு சார்ந்து பல விஷயங்கள் இருக்கின்றன. இவ்வளவு இளைஞர்களை நான் ஒன்று திரட்டிவிட்டேன், இப்போது அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து, அவர் மிகவும் குறுகிய மனப்பான்மையுடன் பேசிவிட்டுச் சென்றுவிட்டாரோ என்ற எண்ணமே எனக்குத் தோன்றுகிறது.
TVK Vijay | Anbil Mahesh |