விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜயும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ல் தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் நடந்தது. அதில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தவெகவோடு கூட்டணி அமைக்கும் அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தரப்படும் என அறிவித்தார்.
விஜயின் அறிவிப்பை விமர்சித்து அறிக்கை வழியாக பதிலளித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், `கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார்.
ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. திமுக எதிர்ப்பும் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது’ என்றார்.
இந்நிலையில், அம்பேத்கர் நினைவுநாளான வரும் டிசம்பர் 6-ல் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் அம்பேத்கர் குறித்த புத்தகத்தை வெளியிட தவெக தலைவர் விஜய் பெற்றுக்கொள்ள இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.