தமிழ்நாடு

அரசு மருத்துவர் மீது தாக்குதல்: விக்னேஷ் மீது வழக்குப்பதிவு

அரசு மருத்துவர் பாலாஜி தற்போது சீராக உள்ளார்.

கிழக்கு நியூஸ்

அரசு மருத்துவரைக் கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி பணியில் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு வெளிநோயாளி சீட்டைப் பெற்று வந்த இளைஞர் விக்னேஷ், மருத்துவர் பாலாஜியைக் கத்தியால் 7 இடங்களில் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த அரசு மருத்துவர் பாலாஜிக்கு, அங்கிருந்த மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்தார்கள். அவர் சீராக இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விக்னேஷின் தாயாருக்கு இதே மருத்துவமனையில்தான் 6 முறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிகிச்சை காரணமாகவே விக்னேஷின் தாயாருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகத் தனியார் மருத்துவமனையில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

தாயாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்புடைய வாக்குவாதத்தைத் தொடர்ந்து, விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து வெளியே சென்ற விக்னேஷை பாதுகாவலர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் தடுத்துப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்கள்.

சிகிச்சைப் பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்தார்கள். விக்னேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மருத்துவனையில் வைத்து விக்னேஷிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். கிண்டி காவல் துறையினர் தற்போது விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். கொலை முயற்சி, தகாத சொற்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.