ஈரோடு தமிழன்பன் காலமானார் 
தமிழ்நாடு

முதுபெரும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் | Erode Tamilanban |

2004-ல் வணக்கம் வள்ளுவ என்ற கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்...

கிழக்கு நியூஸ்

சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் கவிஞர் ஈரோடு தமிழன்பன், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 1933 செப்டம்பர் 28 அன்று பிறந்தவர் ஈரோடு தமிழன்பன். இவரது இயற்பெயர் ந. ஜெகதீசன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கிய ஈரோடு தமிழன்பன், சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அன்றைய சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர் ஈரோடு தமிழன்பன். தமிழில் புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு விதை போட்ட முன்னவர்களில் ஈரோடு தமிழன்பன் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ஹைக்கூ, சென்ரியு போன்ற ஜப்பானிய கவிதை வடிவங்களைத் தமிழில் அறிமுகம் செய்தார். 1972-ல் ஈரோடு தமிழன்பனுக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. அடுத்த ஆண்டு தமிழன்பன் கவிதைகள் நூலுக்காக தமிழ்நாடு அரசின் முதல் பரிசை வென்றார். 2004-ல் வெளியான இவரது வணக்கம் வள்ளுவ என்ற கவிதைத் தொகுப்பாக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். 2018-ல் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது பெற்றார். 60-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளையும், 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார் ஈரோடு தமிழன்பன்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று நவம்பர் 22-ந் தேதி ஈரோடு தமிழன்பன் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கிய ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Veteran poet Erode Tamilanban, who received the Sahitya Akademi Award, passed away today in Chennai due to old age and ill health. He was 92.