மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார் 
தமிழ்நாடு

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார் | Nallakannu |

அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால் இன்று பிற்பகல் உயிரிழந்தார்...

கிழக்கு நியூஸ்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 101.

சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு , கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்தார். தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று வீட்டில் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. அதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.

திடீர் மூச்சுத் திணறல்

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 1 அன்று அவருக்குத் திடீரென தீவிரமான மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயர்தர சிகிசைகள் வழங்கப்பட்டு வந்தன. அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று பிற்பகல் காலமானார்.

மருத்துவ அறிக்கை

அவரது மறைவு குறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

“பிப்ரவரி 1 அன்று நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 நாள்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தது. பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைத்து அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், அவர் பிற்பகல் 1:55 உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும். உறவினர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக்குழுக்களுக்கும், தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Veteran communist leader Nallakannu passed away due to old age. He was 101 years old.