கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மிகக் கனமழை பெய்யும்?

கிழக்கு நியூஸ்

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 7 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்துக்கான வானிலை எச்சரிக்கை அறிவிப்பை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்காலில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்காலில் அநேக இடங்களிலும், நாளை ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழைக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். வடகிழக்குப் பருவநிலை இன்னும் தீவிரமாகவே உள்ளது. தற்போதைய நிலையில் 4, 5 நாள்களுக்கு மழை உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழக கடற்கரைப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வரையும் அவ்வப்போது 57 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அடுத்த மூன்று தினங்களுக்கு இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றார் அவர்.