வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடியின் மனு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2022-ல் மனிதக்கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் மீது சிபிசிஐடி காவல் துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல் துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் சார்பில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 27 அன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி காவல் துறையினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஏற்கப்படுவதாக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், இதை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இந்த வழக்கானது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து நீதித் துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.