தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையேற்றம் இன்றுடன் முடிவு

யோகேஷ் குமார்

கோவை வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அளித்த அனுமதி இன்றுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலையின் 7-வது மலை உச்சியில் உள்ள சிவனை தரிசிக்க, கடந்த பிப். 12 முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்தனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறிவந்தனர்.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

முன்னதாக, வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் இதய பிரச்னை மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் மலையேறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், கோடை காலம் என்பதால் பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்தது. இதுவரை சுமார் 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மலையேறி தரிசனம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அளித்த அனுமதி இன்றுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மலையேறியவர்கள் கீழே இறங்கிய பிறகு, மலைப்பாதை முழுமையாக மூடப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.