சென்னை வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் சேவை பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மற்றும் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை ஆகிய இரண்டு வழியாக தினமும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருகிறார்கள். இவ்விரண்டு ரயில் பாதைகளையும் இணைக்கும் வகையில் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக 5 கி.மீட்டர் தூர மேம்பால ரயில் பாதை கட்டும் பணி கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது.
ஆனால், தில்லை கங்கா நகர், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை ஏற்பட்டதால் இப்பணி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் 2022-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது ஏறத்தாழ பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில் சேவை பொங்கல் பண்டிகைக்குள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தெற்கு ரயில்வே பயண ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த ஜாபர் அலி, “வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான ரயில் சேவைப் பணிகள் 95% நிறைவடைந்துவிட்டது. இறுதிகட்ட பணிகள் மீதமுள்ளன. நவம்பர் மாதம் முதல் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தெரிய வருகிறது. இந்த மேம்பாலத்தில் மின்சார ரயில் மட்டும் தற்போதைக்கு இயக்கப்படவுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இப்பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் நிறைவடையும்” என்று கூறினார்.