காணொளி வெளியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 
தமிழ்நாடு

கூட்டணியில் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுவதில் வலி இருக்கிறது: உடைத்துப் பேசிய திருமாவளவன் | Thirumavalavan |

விசிகவினர் 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் ஆனால் நேர்காணல் நடத்தப்படாது...

கிழக்கு நியூஸ்

திமுகவில் குறைவான தொகுதி ஒதுக்கப்படுவது குறித்த வலி உண்டு ஆனால் வலிமையும் உண்டு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தொகுதிப் பங்கீடுகளை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யும் பணி, விசிகவுக்குள் மார்ச் 23 முதல் தொடங்குகிறது. இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ள அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படுவது குறித்த வருத்தத்துடன் அதனைப் பதிவிட்டிருந்தார்.

விருப்பமனு உண்டு; நேர்காணல் இல்லை

காணொளியில் அவர் கூறியதாவது:-

விருப்ப மனுக்களைப் பெற்ற பிறகு நேர்காணல் நடத்துவது என்ற நிலை இல்லை. 2016-ல் நேர்காணல் நடத்தினோம். இப்போது அதற்கான வாய்ப்பில்லை. நாம் எந்தெந்தத் தொகுதிகளைக் கேட்டுப் பெறுகிறோமோ அவற்றின் வெற்றி வாய்ப்புகளையும், கள நிலவரங்களையும் கருத்தில் கொண்டு கட்சிக்கு நம்பிக்கைக்குரியவர்களாக நீண்ட நாள்களாக பணியாற்றுபவர்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த காலங்களில் நாம் வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளோம். இப்போதும் அப்படித் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்குக் கட்சி வழங்கியிருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணியில் நாம் இருந்தபோது 25 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் சுதந்திரமாக முடிவெடுத்துப் பலருக்கும் வாய்ப்பளிக்க முடிந்தது. 10-க்கும் கீழே மிகச் சொற்பமான இடங்களைப் பெறும்போது நீண்ட காலமாகக் காத்திருப்போர் பட்டியலையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்தவர்களை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கமும் உண்டு.

வலிமையைத் தக்க வைப்பதும் முதன்மையானது என்ற அடிப்படையில் தான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்து நிற்கிறோம். தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகளில் நாம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். இது தற்காலிகமாக வெற்றிகரமான அணுகுமுறை இல்லை என்று தோன்றினாலும் கூட காலத்திற்கும் போற்றப்படும் வெற்றிகரமான யுத்தி என்பதைக் காலம் உணர்த்தும்” என்று பேசியிருந்தார்.

இரட்டை இலக்க கோரிக்கை

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து விளக்கமளித்தார். அப்போது, தேர்தலில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று திருமாவளவன் கூறினார். அவர் பேசியதாவது:-

234 தொகுதிகளிலும் உள்ள தோழர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளியிடுகின்றனர். அவர்களுக்கே தெரியும் மெகா கூட்டணியில் இடம்பெறும்போது எத்தனை தொகுதிகளை நம்மால் பெறமுடியும் என்பது அவர்களுக்கே தெரியும். அதைத் தெரிந்துகொண்டுதான் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்ய விரும்புகிறார்கள். அந்த உணர்வை மதிக்க வேண்டியது ஜனநாயகத்தின் முக்கியக் கூறு. ஆகவே, ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின்போதும் விருப்ப மனுக்களைப் பெறுவதை நடைமுறையாக வைத்திருக்கிறோம். அதன்படிதான் இந்த முறையும் விருப்ப மனுக்களைப் பெறுகிறோம்.

வலி உண்டு; வலிமையும் உண்டு

எண்ணிக்கை, தொகுதிகள் எவை எவை என்று முடிவான பிறகு தேவைப்பட்டால் அந்தத் தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும். கால அவகாசம் இருந்தால் அதைச் செய்வோம். இல்லையென்றால் வழக்கம்போல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து அறிவிப்போம். கூடுதலான எண்ணிக்கை வேண்டும் என்பது பொதுவான கருத்தாகவும் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பொது வெளியிலேயே விவாதங்கள் நடந்து வருகிறது. நாங்களும் அந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளோம். அதே வேளையில் 23 கட்சிகள் இடம்பெற்றுள்ள மெகா கூட்டணியாக திமுக கூட்டணி இருப்பதால், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. கூட்டணி வலிமையாக இருந்தால்தான் வலதுசாரி பிற்போக்கு சக்திகளை வீழ்த்த முடியும் என்ற புரிதல் இருக்கின்ற காரணத்தால் இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வை எட்டவிருக்கிறோம். குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுவது குறித்த வலியும் உண்டு. அதில் வலிமையும் உண்டு.

கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும்

திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. திமுகவுடன் இணக்கமாக இருக்கும்போதும் கால தாமதம் ஆகிறது என்பதால் கூட்டணிக்குள் குழப்பமும் விரிசலும் ஏற்படும் என்பதில்லை. கூட்டணியை வலிமையாக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறோம். அதே நேரத்தில் எங்களுக்கான பகிர்வுகளைப் பெற வேண்டும் என்ற முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறோம். அதனால் இந்தக் கால இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இரட்டை இலக்கம் என்றால் குறைந்தபட்சம் 10 என்பதையே வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.