படம்: @thirumalatrust
தமிழ்நாடு

வடகலையா? தென்கலையா?: தீர்மானித்த குடவோலை முறை

ஹிந்து அறநிலையத் துறை முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிழக்கு நியூஸ்

காஞ்சிபுரத்தில் பெருமாள் கோயிலில் வடகலையா, தென்கலையா என முடிவெடுக்க குடவோலை முறை பயன்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் விளக்கொளி பெருமாள் கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி வீதி உலா நடைபெற்றது.

வீதி உலா புறப்பாடின்போது, சுவாமி முன் செல்வது யார் என்ற பிரச்னை வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே ஏற்படும் என்பதால் இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பு முறையிடப்பட்டது. இதில் ஹிந்து அறநிலையத் துறை முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் முன்னிலையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், குடவோலை முறையில் தீர்வுகாண இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டார்கள்.

இதன்படி, இரு துண்டுச் சீட்டுகளில் வடகலை மற்றும் தென்கலை என எழுதப்பட்டு குழந்தை மூலம் ஒரு சீட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் வடகலை என எழுதப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சுவாமி வீதி உலாவின்போது, சுவாமி முன்பு வடகலைப் பிரிவினர் செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டது. இரு தரப்பினரும், இதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.