உதயநிதி  
தமிழ்நாடு

ஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களுக்கு ரூ. 7 லட்சம் ஊக்கத்தொகை: உதயநிதி

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

யோகேஷ் குமார்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் இந்தாண்டு தொடங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன், மானியக்கோரிக்கை விவாதங்கள் மீதான பதிலுறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது:

“கடந்த முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த முறை ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 12 தமிழக வீரர்கள் பங்கேற்றிருந்தனர், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை மத்தியப் பிரதேசத்தில் நடத்த மத்திய அரசு ரூ. 25 கோடியை அம்மாநில அரசுக்கு வழங்கியது. ஆனால், தமிழ்நாட்டில் நடத்த ரூ. 10 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் இந்தாண்டு தொடங்கப்படும்” என்றார்.

2024 ஒலிம்பிக்ஸ் ஜூலை 26 அன்று தொடங்கி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது. இதில் 4X400 மீட்டர் பிரிவில் - ஆரோக்கிய ராஜீவ், சுபா வெங்கடேசன், பாய்மர படகுப் பிரிவில்- நேத்ரா, விஷ்ணு சரவனன், டேபிள் டென்னிஸில் சரத் கமல், சத்தியன், துப்பாக்கிச் சுடுதலில் பிரித்விராஜ் தொண்டைமான், உட்பட 16 தமிழக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.