சென்னையில் அக்டோபர் முடியும் வரை தினமும் மழை பெய்யும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்கிழக்கு வங்கக் கடலிலும் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் விரைவில் உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த அக்டோபர் 16 அன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மழை எப்படி இருக்கும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவரது சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
“சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான தமிழ்நாடு முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மழை பெய்யவுள்ளது. அக்டோபர் மாதம் அதிக மழைபொழிவைப் பெறவுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் மாத இறுதி வரை தினமும் மழை பெய்யும். இடையில் சில நாள்களில் கனமழை பெய்யும். பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே கனமழை இருக்கும். பகலில் விட்டுவிட்டு மழை பெய்யும். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மேகங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால் இன்று பகல் பொழுதில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும். கேளம்பாக்கம் - சிறுசேரி ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தீபாவளிக்கு பொருள்கள் வாங்கச் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்லுங்கள். முக்கியமாக தீபாவளி அன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.