மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு  ANI
தமிழ்நாடு

2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: பியூஷ் கோயல் | Piyush Goyal |

அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகள் ஒரு குடும்பமாக செயல்பட்டு வெற்றிபெற வேண்டும்...

கிழக்கு நியூஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக இணைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக உடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து அதிமுக தேர்தலில் போட்டியிடுகிறது. இதற்கிடையில், பாஜகவின் மாநில தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று சென்னை வந்தார். தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவர் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி, கள நிலவரம், வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை

அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியார் விடுதி ஒன்றில் சந்தித்து சுமார் ஒன்றரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையின்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர்.

பியூஷ் கோயல் பேச்சு

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பியூஸ் கோயல் கூறியதாவது:-

“இன்று சென்னையில் அதிமுகவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் வழிநடத்தி வரும் என் நண்பரும் சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். அதிமுகவும், பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் அரசியல் ரீதியாக செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் வலுப்படுத்த வேண்டிய இடங்களைப் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம். 2026 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு குடும்பமாக இணைந்து போட்டியிடுவது குறித்து பேசினோம். வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். அடுத்த சில மாதங்களுக்கான விரிவான திட்டங்களைப் பற்றி இன்று விவாதித்திருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களையும், ஆர்வமுள்ள இளைஞர்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றைக் கேட்டறிந்து, ஊழல் மிகுந்த திமுகவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் அடைந்திருக்கும் துன்பங்களை எல்லாம் கேட்டறிந்து செயல்படப் போகிறோம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறுகுறு வணிகர்கள், இளைஞர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்படும் நல்லாட்சி அமைய வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. இது தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வாக்குறுதி. பாஜக, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டின் பிரகாசமான எதிர்காலத்துக்காக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

”நீண்ட இடைவெளிக்குப் பிறகு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்திருக்கிறோம். தமிழ்நாட்டின் நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்ற கருத்துகளைப் பறிமாறிக் கொண்டோம். அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்கான திட்டங்கள் பற்றிய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அடுத்தாண்டு வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Union Minister Piyush Goyal has stated that he is confident the National Democratic Alliance, which includes the BJP and AIADMK, will achieve a massive victory in the 2026 Tamil Nadu Legislative Assembly elections.