தமிழ்நாட்டின் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி.
தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் நிதின் கட்கரி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`திருப்பூர் மாவட்டத்தில், ரூ. 9.22 கோடி மதிப்பீட்டில் 2 மேம்பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி-தாராபுரம்-கரூர் சாலையிலும் (மாநில நெடுஞ்சாலை எண்:21), ஈரோடு-முத்தூர்-வெள்ளக்கோவில்-புதுப்பை சாலையிலும் (மாநில நெடுஞ்சாலை எண்:84A) தற்போது உள்ள உயர்மட்டப் பாலங்களுக்கு பதிலாகப் புதிய உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில், கண்ணன்குடி சாலை வழியாகச் செல்லும், தேவகோட்டை-புதுக்கோட்டை மாவட்ட எல்லை சாலையில் ரூ. 8.26 கோடி மதிப்பீட்டில் ஒரு உயர்மட்டப் பாலம் கட்டப்படும்.
அரியலூர் மாவட்டத்தில், கொடுக்கூர்-காடுவெட்டி சாலையில் (மாநில நெடுஞ்சாலை 144) தற்போது உள்ள மேம்பாலத்திற்கு மாற்றாக ரூ. 5.89 கோடி மதிப்பீட்டில் ஒரு உயர்மட்டப் பாலம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், உப்பூர்-கோட்டையூர் சாலையிலும் (மாநில நெடுஞ்சாலை எண்), திருவாடனை-எஸ்.பி. பட்டிணம் சாலையிலும், ரூ. 10.64 கோடி மதிப்பீட்டில் 2 உயர்மட்டப் பாலங்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், முதுகுளத்தூர்-வீரசோழன் சாலையில் தற்போது உள்ள உயர்மட்டப் பாலத்திற்கு மாற்றாக, ரூ. 10.64 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்டப் பாலம் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு தொகுப்பில் (CIRF) இருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.