புதுச்சேரியில் 60% வாக்குகளைப் பெறுவோம் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இலக்கு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
காரைக்காலில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். முன்னதாக திருச்சி விமான நிலையத்திற்குத் தனி விமானம் மூலம் வந்த அவர், சாலை மார்க்கமாக காரைக்கால் சென்றார். அங்கு, கோட்டுச்சேரி பகுதியில் சுவரில் வரையப்பட்டிருந்த தாமரை சின்னத்திற்குக் காவி வண்ணம் தீட்டினார். அதன்பின் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்குச் சென்ற அவர் அங்கு உரையாற்றியதாவது:-
பொதுக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
“உலகின் மிகத் தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இன்று, இந்த பிரமாண்டமான பேரணியை நடத்துவதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, பிரதமர் மோடி மற்றும் ரங்கசாமி தலைமையிலான இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் செய்யப்பட்ட பணிகளின் அறிக்கையை உங்கள் முன் வைப்பது. இன்னொன்று இந்தியா கூட்டணியை அம்பலப்படுத்துவது.
புதுச்சேரியில் ஸ்திரத்தன்மை
5 ஆண்டுகளுக்கு முன்பு, புதுச்சேரி மக்கள் பிரதமர் மோடி மற்றும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தனர். இந்த அரசாங்கம் ஊழலை ஒழித்தல், புதுச்சேரியை யூனியன் பிரதேசமாக மாற்றுதல் மற்றும் இங்கு அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பணிகளை நிறைவேற்றியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம்
2019-ல் இந்த நாளில், புல்வாமா தாக்குதலில் நமது வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். காங்கிரஸ் ஆட்சியின் போது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒவ்வொரு நாளும் நமது வீரர்களைத் தாக்கினர். இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் அல்லது நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எந்த எதிர்வினையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. அன்றாட தாக்குதல்களைக் காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றி இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி வந்தபிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாகப் பதிலடி தரப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி, பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரதமர் மோடி.
60% வாக்குகள் இலக்கு
பிரதமர் மோடி இந்தியாவை வளமானதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற பாடுபட்டுள்ளார். புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாஜக மற்றும் தலைவர்கள் ரங்கசாமி, பிரதமர் மோடி ஆகியோர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள். 2021 சட்டமன்றத் தேர்தலில், புதுச்சேரி மக்கள் 44% வாக்குகளுடன் வாக்களித்தனர்... ஆனால் இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி 60% வாக்குகளுடன் இடங்களை வெல்ல இலக்கு வைத்துள்ளது.
வளர்ச்சியடைந்த புதுச்சேரி
ஐந்து ஆண்டுகளாக, காங்கிரஸ் அரசாங்கம் இங்கு ஊழல் மற்றும் குழப்பமான சூழலை உருவாக்கியது. ஐந்து ஆண்டுகளில், ஊழலை ஒழித்து, குழப்பத்தை ஒழுங்காக மாற்றினோம், இப்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த புதுச்சேரியாக மாற்ற வேண்டிய நேரம் இது... முன்னதாக, புதுச்சேரி தொடர்பான முடிவுகளை தில்லியில் காந்தி குடும்பத்தினர் எடுத்தனர். இப்போது புதுச்சேரி தொடர்பான முடிவுகளை புதுச்சேரியே எடுத்து வருகிறது” என்றார்.