ANI
தமிழ்நாடு

நூறு நாள் வேலை திட்டம்: தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி விடுவிப்பு!

ரூ. 4,034 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ராம் அப்பண்ணசாமி

நூறு நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,999 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

கடந்த 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் நூறு நாள் வேலை திட்டத்தை மத்திய அரசின் பங்களிப்புடன் மாநில அரசுகள் செயல்படுத்து வருகின்றன.

தமிழகத்தில் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் ஊரகப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வேலை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். மேலும், இந்த திட்டப் பயனாளிகளில் 86% பேர் பெண்களாக உள்ளனர். அத்துடன் மொத்த பயனாளிகளின் சுமார் 29% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் முதல் இத்திட்டத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு நிதியான ரூ. 1,056 கோடி நிலுவையில் இருந்ததால், அதை விடுவிக்கக்கோரி கடந்த ஜன.13 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதனால் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. ஆனால் நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் நிலுவைத் தொகை மார்ச் மாதத்தில் ரூ. 4,034 கோடியாக உயர்ந்தது.

நிதியை விடுவிக்காத மத்திய அரசைக் கண்டித்து கடந்த மார்ச் 29-ல் தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் திமுகவால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திற்கான மொத்த நிலுவைத் தொகையில், ரூ. 2,999 கோடி நிதியை மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது.