கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

நெல் ஈரப்பத வரம்பை உயர்த்தக் கோரிக்கை: ஆய்வுக் குழு அமைத்தது மத்திய அரசு | Paddy |

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத உச்ச வரம்பை 22% ஆக உயர்த்த தமிழக அரசு கோரிக்கை...

கிழக்கு நியூஸ்

நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் நெல்லின் ஈரப்பத உச்ச வரம்பை 22% ஆக உயர்த்தும் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அமைத்தது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம், விளை நிலங்களில் நீர் தேங்கியுள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் ஈரமாகியுள்ளதால் கொள்முதல் செய்யப்பட தகுதி இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மழையில் நனைந்த நெல்லின் ஈரப்பதம் 23 - 25% வரை உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் மத்திய அரசு வகுத்துள்ள விதிகளின்படி 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும். இதையடுத்து, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத உச்ச வரம்பை 22% ஆக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில், 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விதியைத் தளர்த்தி, அதன் உச்ச வரம்பை 22% ஆக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

மத்திய உணவுக்குழு இயக்குநர் தலைமையில் 9 பேர் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்படுள்ளது. அவர்களது ஆய்வு மற்றும் பரிசோதனைகளின் முடிவுகள் அடிப்படையில், நெல் ஈரப்பத வரம்பு 17% ல் இருந்து 22% ஆக அதிகரிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Union Government has formed a committee of officials to collect and study paddy samples from rain-affected areas of Tamil Nadu to examine the demand for raising the moisture content limit for paddy to 22%.