சென்னையில் பெய்துவரும் கனமழையை ஒட்டி, அது சார்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து இன்று (அக்.15) பேட்டியளித்தார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அவர் பேசியவை பின்வருமாறு:
`வடகிழக்குப் பருவமழையை ஒட்டி, சென்னை மாநகராட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 4.6 செ.மீ. மழை பெய்திருக்கிறது. இதில் சோழிங்கநல்லூரிலும், தேனாம்பேட்டையிலும் அதிகபட்சமாக 6.1 செ.மீ. மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தண்டையார்பேட்டையில் 2.8 செ.மீ மழை பெய்திருக்கிறது.
300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் சராசரியாக 50-ல் இருந்து 1000 நபர்கள் வரை தங்க வைப்பதற்கான வகையில் சென்னை மாநகராட்சியால் தயார் நிலையில் உள்ளன. இந்த நிவாரண மையங்களில் தண்ணீர், பிஸ்கட், பிரெட், பால் பாக்கெட்டுகள் ஆகியவை உள்ளன.
35 காமன் கிச்சன்ஸ் என்று அழைக்கப்படும் சமையலறை மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த 24 மணி நேரத்தில் எங்குமே மின்தடை ஏற்படவில்லை.
கடைசி 12 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன, அதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டன. சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படைகளைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 89 படகுகளும், பிற மாவட்டங்களில் 130 படகுகளும் பணியில் உள்ளன. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 630 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன’ என்றார்.
இதைத் தொடர்ந்து, தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை எழிலகத்தில் இயங்கிவரும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.