படம்: https://twitter.com/Udhaystalin
தமிழ்நாடு

நான் கல்லைக் காண்பித்தால், இபிஎஸ் பல்லைக் காண்பிக்கிறார்: உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

"நீங்கள்தான் ஓபிஎஸ், சசிகலா, மோடி, ஜெ. தீபா, ஜெ. தீபாவின் ஓட்டுநர் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முறையில் பேசுவீர்கள்."

கிழக்கு நியூஸ்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கல்லைக் காண்பித்தால், எடப்பாடி பழனிசாமி பல்லைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ வேட்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தக் கூட்டத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை திமுக ஆட்சியின்போது தான் கொண்டுவரப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி இன்னும் அமைக்கப்படாததைக் குறிப்பிடும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைக் காட்டி பிரசாரம் செய்து வருவதையும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கதையை மாற்று, ஸ்கிரிப்ட்டை மாற்று என்று உதயநிதியை சாடினார்.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்குப் பதிலடி தந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

"நானாவது எய்ம்ஸில் வைக்கப்பட்ட கல்லைக் காண்பித்தேன். இங்க ஒருத்தர் பல்லைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார் (பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைக் காண்பித்துக் கூறினார்). இந்தப் புகைப்படம் ஜனவரி 27, 2019-ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் எடுக்கப்பட்ட பல்லைக் காண்பிக்கும் புகைப்படம்.

நான் எதற்காக என் ஸ்கிரிப்டை, கொள்கையை மாற்றி பேச வேண்டும். எங்களுக்கு இருக்கும் ஒரே கொள்கை இதுதான். எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும், நீட் தேர்வு வேண்டாம், மாநில சுயாட்சி தேவை.

உங்களைப்போல நேரத்துக்குத் தகுந்தாற்போல, ஆளுக்குத் தகுந்தாற்போல பேச்சை மாற்றிப் பேசக்கூடிய ஆள் நான் கிடையாது. நீங்கள்தான் ஓபிஎஸ், சசிகலா, மோடி, ஜெ. தீபா, ஜெ. தீபாவின் ஓட்டுநர் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முறையில் பேசுவீர்கள். உங்களைப்போல மாறிமாறி பேச திமுககாரன் பச்சோந்தி கிடையாது. நான் கலைஞரின் பேரன்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.