சென்னையில் ரூ. 84.60 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியின் கீழ் ரூ.86.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட வீடற்றோருக்கான இரவுநேர காப்பகத்தைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, காப்பகத்தில் தங்கும் 86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கை விரிப்பு உள்ளிட்ட நல உதவி தொகுப்புகளை வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
“சென்னை மெரினா கடற்கரையில் தங்கி, கைவினைப் பொருட்கள், பலூன்கள், அழகு சாதன பொருட்கள், பூக்கள் எல்லாம் விற்று வந்த 86 ஆதரவற்றோர்களுக்கு நம் முதலமைச்சர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பாக, இங்கே கடற்கரை பகுதியில் அவர்கள் தங்கியிருப்பதற்காக 2,500 சதுர அடியில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடற்றோர் இரவு நேர காப்பகத்தைத் திறந்து வைத்திருக்கிறோம்.
காப்பகத்தில் தங்குவோர்க்கு அத்தியாவசிய பொருள்கள்
இந்தக் காப்பகத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிப்பிடங்கள், குளியலறைகள், அவர்கள் பொருட்களை எல்லாம் சேமித்து வைப்பதற்கு அலமாரிகள், குடிநீர் வசதி, மின் வசதி இப்படி அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு மாநகராட்சியின் சார்பாக பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருள்களும் தரப்பட்டிருக்கிறது.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு
ஆரம்பத்தில் இருந்தே சிறப்பு தீவிர திருத்தத்திற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். இந்தக் கால அவகாசம் போதாது என்று சொல்லியிருக்கிறோம். முக்கியமாக பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் அறிவித்து யாருடைய வாக்குகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாக நம் முதலமைச்சர் சொன்னார். எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை நீக்கியிருக்கிறார்கள். 97 லட்சம் நீக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. நீக்கப்பட்ட வாக்குகள், விடுபட்டுபோனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் இவர்களையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கியிருக்கிறார். வாக்குச்சாவடிகளுக்கு சென்று மக்கள் தங்கள் வாக்குகள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். அங்கிருக்கும் நமது வாக்குச்சாவடி நிலை முகவர்களைத் தொடர்பு கொண்டால், நிச்சயம் அதையெல்லாம் மீண்டும் சேர்ப்பதற்கு ஜனவரி 18 வரை நேரம் உள்ளது. எனவே அந்த பணிகளில் ஈடுபடுத்துவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம்” என்றார்.
Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated a newly constructed night shelter for the homeless in Chennai, built at a cost of ₹84.60 lakh.