பட்டாசு ஆலை விபத்து - கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 2 தொழிலாளர்கள் பலி!

காயமடைந்தோருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராம் அப்பண்ணசாமி

விருதுநகரின் காரியாபட்டி அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 11) ஏற்பட்ட வெடி விபத்தில், 2 தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர், 3 தொழிலாளிகள் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு அருகே உள்ள வடகரையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில், பல்வேறு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை தொழிலாளர்கள் அனைவரும் ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒரு அறையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த ஆலைக் கட்டடம் இடிந்து தரைமட்டமானதுடன், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளிகளான கல்குறிச்சியை சேர்ந்த சௌடம்மாள் (53) மற்றும் கண்டியனேந்தலை சேர்ந்த கருப்பையா (35) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், முருகன் (45), பிச்சையம்மாள் (43) மற்றும் கணேசன் (43) ஆகிய தொழிலாளிகள் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தனர். இவர்கள் மூவருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காரியாபட்டி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.