அரசுப் பள்ளி சுகாதார வளாகத்தில் தடுப்புச் சுவர் இல்லாமல் கழிவறை கட்டிய விவகாரத்தில் அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்தப் பேரூராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இந்த வளாகம் கடந்த இரு நாள்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்குப் பிறகு சுகாதார வளாகத்தைப் பார்வையிட்ட பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. கழிப்பறைகளுக்கு இடையே தடுப்புச் சுவர் எதுவும் இல்லாமல் இருந்தது தான் அதிர்ச்சிக்கான காரணம்.
கடந்த இரு நாள்களாக சமூக ஊடகங்களில் இந்தப் புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டன. சிறுநீர் கழிப்பதற்கான கழிவறையில் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் இருப்பது வழக்கம் தான் பொறியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இதைக் கட்டுவதற்கானத் திட்டத்திலேயே தடுப்புச் சுவர் இடம்பெறாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தடுப்புச் சுவர் இல்லாமல் கழிவறைகளைக் கட்டியது தொடர்பாக இரு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் எனச் செய்தி வெளியாகியுள்ளது. இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் இச்சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது.
Suspension | Government School |