தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டங்களில் தவெகவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்: விஜய் கடிதம் 
தமிழ்நாடு

தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டங்களில் தவெகவைச் சேர்த்துக் கொள்ளுங்கள்: விஜய் கடிதம் | Election Commission |

வாக்காளர்களின் கணிசமான பிரிவை பங்கேற்பு மேற்பார்வையில் இருந்து விலக்குவதுபோல் உள்ளது...

கிழக்கு நியூஸ்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு எங்களையும் அழைத்திடுங்கள் என்று தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 4 முதல் தொடங்கி நடத்தி வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

விஜய் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு தெளிவான மற்றும் நிரூபிக்கக்கூடிய இருப்பு உள்ளது. மேலும், வரவுள்ள தேர்தல்களில் மாநிலம் முழுவதும் நாங்கள் போட்டியிடுகிறோம். குடிமக்கள் அனைவரது குரலும் கேட்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஜனநாயக செயல்முறையை முன்னேற்ற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதனடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் சமமான போட்டித் தளத்தை உறுதி செய்ய வேண்டியது அரசியலமைப்பின் அடிப்படையில் இன்றியமையாதது என்பதைப் பதிவு செய்கிறோம்.

ஆனால், தேர்தல் ஆணையம் நடத்தும் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகம் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் சுற்றறிக்கைகளில் இருந்தும் தவெக விலக்கப்படுகிறது. தேர்தல் தயாரிப்பு செயல்முறைகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரின் அலுவலகத்தால் கூட்டப்படும் ஆலோசனைக் கூட்டங்களில் தவெகவைச் சேர்க்காதது, வாக்காளர்களின் கணிசமான பிரிவை பங்கேற்பு மேற்பார்வையில் இருந்து விலக்கும் விளைவை ஏற்படுத்துகிறது என்பதையும் தெரிவிக்கிறோம்.

வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் வகையில், தவெகவுக்கு உரிய அறிவிப்பை வழங்கி, தமிழ்நாட்டில் பின்வரும் தேர்தல் தயாரிப்புகள் தொடர்பான அனைத்து எதிர்கால கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கோருகிறோம்.

இந்திய அரசியலமைப்பின் 324-ம் பிரிவின் கீழ் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி, இனிமேல் தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கூட்டப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் விவாதங்களில் தவெக சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

TVK leader Vijay has written a letter to the Election Commission requesting that they also be invited to all-party meetings regarding the Special Intensive Revision of the voter list.