தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பாஜகவின் பிடியில் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. விமர்சித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாகவும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, அவ்வப்போது செய்தியாளர்களைச் சந்தித்து வரும் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. இச்சம்பவம் தொடர்பாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாள்களுக்கு முன்பு காணொளி ஒன்றை வெளியிட்ட விஜய், தான் ஏன் கரூர் செல்லவில்லை என்று விளக்கமளித்தார். மேலும், மற்ற மாவட்டங்களில் நிகழாதது, கரூரில் மட்டும் நிகழ்ந்தது ஏன் எனக் கேள்வியெழுப்பினார். தன்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், கட்சித் தோழர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்ற தொனியிலும் முதல்வரைக் குறிப்பிட்டு விஜய் பேசியிருந்தார்.
இதை விமர்சித்துப் பேசிய திருமாவளவன், "கரூர் சம்பவத்துக்காக அவர் துளியும் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. அவருக்குக் குற்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.
கொஞ்சம்கூட கவலைப்படாத நிலையில், ஆட்சியாளர்கள் மீது பழியைப்போட நினைக்கிறார் என்றால் அவர் எவ்வளவு ஆபத்தான அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார் அல்லது ஆபத்தானவர்களின் கைகளில் சிக்கியிருக்கிறார் என்று எண்ணும்போது பெரும் கவலையளிக்கிறது.
இதுபோன்ற சக்திகளிடம் தமிழ்நாடு மக்கள் சிக்கிக்கொண்டால் எதிர்காலம் என்னவாகுமோ என்கிற அச்சமும் எழுகிறது" என்றார் திருமாவளவன்.
மேலும், "பாஜகவைக் கொள்கை எதிரி என்று விஜய் கூறிய பிறகு, பாஜக எதற்காக அவருக்கு (விஜய்) முட்டுகொடுக்கிறார்கள். பாஜகவினர் ஏன் விஜயைத் தாங்கிப்பிடிக்கிறார்கள். பாஜகவைக் கொள்கை எதிரி என நான் அறிவிக்கிறேன். எனக்கு அவர்கள் (பாஜக) ஆதரவு தெரிவிப்பார்களா? எதிரி என்று அவர் (விஜய்) அறிவித்தபிறகு, பாஜகவுக்கு அங்கு என்ன வேலை? பாஜக ஏன் ஓடி வந்து நிற்கிறார்கள்?
தன்னைக் கொள்கை எதிரி என்று சொல்லிக்கொள் என பாஜகவினர் சொல்லிக்கொடுத்தார்கள், விஜய் சொன்னார்.
திமுகவை முதல் எதிரியாகச் சொல்ல வேண்டும், அது தேர்தல் அரசியல் எதிரியாக இருக்கட்டும் என்று விஜய்-க்கு சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. கொள்கை எதிரி என தன்னைச் சொல்லிக்கொள், ஆனால் விமர்சனம் செய்ய வேண்டாம் என பாஜக சொல்லிக்கொடுத்துள்ளது. இப்படி பல பேரை தமிழ்நாட்டில் இறக்கிவிட்டிருக்கிறார்கள்.
இது பாஜகவின் சூது, சூழ்ச்சி. தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக அவர்களால் கால் ஊன்ற முடியவில்லை. என்னென்னமோ பகிரங்க முயற்சிகளை மேற்கொண்டு பார்க்கிறார்கள், முடியவில்லை" என்று திருமாவளவன் விமர்சித்தார். இவற்றுக்கு மத்தியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
"கும்பமேளாவில் கூட்டநெரிசல் எப்படி ஏற்பட்டது என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஆனால், அங்கு 64 கோடி பேர் வந்தார்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
கரூர் கூட்டநெரிசலின்போது மின்சாரத்தைத் துண்டித்தது யார்? செருப்பைத் தூக்கி வீசியது யார்? காவல் துறை என்ன செய்துகொண்டிருந்தது? இவர்கள் (தவெக) கேட்ட இடத்தில் ஏன் அனுமதி கொடுக்கவில்லை? காவல் துறையினர் தடியடி நடத்தியதன் அவசியம் என்ன? கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கானக் காரணம் என்ன? முதல்வர் வருகை தந்தால் ரவுண்டானா போன்ற நல்ல இடங்களில் அனுமதி கொடுக்கிறார்கள். இவர்களுக்கு (தவெக) மட்டும் ஏன் அந்த இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை? இதையெல்லாம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
தனிநபர் ஆணையத்தை யாருக்காகப் பயன்படுத்துவார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பாஜகவை தங்களுடைய எதிரி என அவர் (விஜய்) ஏற்கெனவே கூறி வருகிறார். எங்களை விமர்சனம் செய்து பேசி வருகிறார். இப்படி இருக்கும்போது எங்களுடைய பிடியில் எப்படி அவர் இருக்க முடியும்?" என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
Nainar Nagenthran | BJP | TVK Vijay | Vijay | Karur | Karur Stampede |