தஞ்சையில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் 
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகிவிட்டது: தஞ்சையில் விஜய் பேச்சு | TVK Vijay |

அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.....

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் இரண்டாவது முறை திமுக வெற்றி பெறுவது என்பது கருணாநிதியாலேயே முடியாத காரியம் என்று பேசிய தவெக தலைவர் விஜய், திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகி இருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “வேலூர் கூட்டத்தில் நான் பேசியபோது இது தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல், இதை ஏன் தமிழ்நாட்டிற்கும் தில்லிக்குமான தேர்தல் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டிருந்தேன். உடனே, விஜய் தில்லிக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். சிறுபாண்மை சகோதரர்களைப் பயமுறுத்தி, ஏமாற்று வேலை செய்வார்களே அதை இனிமேல் செய்ய முடியாது என்பதால்தான் என் பேச்சைத் திரித்துக் கூறி வருகிறார்கள்.

அணிகளைத் தவெக நொறுக்கும்

சென்னையில் இருந்துகொண்டு தில்லி, தில்லி என்று கூவுவதும், அடிக்கும் கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால் தில்லிக்கு வெள்ளைக் கொடி பிடிப்பதும் யார் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். ”ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி” என்று சின்னப் பசங்கள் எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ்நாட்டு அணி, தில்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை தில்லி அணியால் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது கிரிக்கெட்டிலும் விசில் போடுவது தமிழ்நாட்டின் சிஎஸ்கே தான். வரவிருக்கும் தேர்தலிலும் விசிலைப் போடப்போவது டிவிகேதான். தமிழ்நாடுதான் தவெக. தவெகதான் தமிழ்நாடு. இந்த அணி, அந்த அணி, தில்லி அணி என்பதையெல்லாம் தவெக அடித்து நொறுக்கும்.

தவெகவுக்கும் மக்களுக்குமான உறவு

எனக்கும் என் மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. இது அம்மா - மகன், அப்பா - மகன், அண்ணன் - தம்பி, அண்ணன் - தங்கை உறவு. இது தேர்தலுக்கான உறவு என்று நினைத்துவிடாதீர்கள். இது இயற்கையாகவே அமைந்த உறவு. மற்றவர்களுக்கு வேண்டுமானால் இது எலெக்‌ஷன், எனக்கும் என் மக்களுக்கும் இது எமோஷன். And its not an ordinary emotion. Its powerful oceanic emotion. இப்படி இருக்கும்போது வீட்டுக்கு வீடு விஜய், தமிழ்நாட்டுக்காக விஜய், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்பவை எல்லாம் நூறு சதவீதம் இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்படும்.

விவசாயக் குடும்பத்தில் பிறக்க ஆசை

நமக்கு ஏதாவது பிரச்னை வந்தால்தான் மருத்துவர், வழக்கறிஞர் ஆகியோரை நினைப்போம். ஆனால் அன்றாடம் சாப்பிடும்போது நாம் நினைத்துப் பார்ப்பவர்கள், விவசாயிகள். பூமியைச் சாமி ஆக்குபவர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயத்தைப் பற்றி விரிவாக ஏதும் தெரியாது தான். நான் ஒப்புக் கொள்கிறேன். அதனால் மற்றவர்கள் போல் நானும் டெல்டாகாரன் தான் என்று உங்கள் காதுகளில் டால்டா ஊற்றுவதற்காக நான் வரவில்லை. எனக்கு விவசாயத்தைப் பற்றி விரிவாகத் தெரியவில்லை என்றாலும் விவசாயிகள் படும் கஷ்டத்தைப் பற்றித் தெரியும். நமது முதல் அரசியல் பயணம் தொடங்கியதே பரந்தூர் விஷயத்தைக் கையில் எடுத்துதான். அதனால் நம் ஆட்சி அமைந்ததும் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்னைகளில் விவசாய பிரச்னைகளும் உண்டு.

திமுக ஆட்சியில் தமிழ்நாடே திவால்

முதலமைச்சர் அவர்கள், இதைச் செய்துவிட்டோம், அதைச் செய்துவிட்டோம் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்களே, ஒரு அடிப்படைப் பிரச்னையைப் பற்றிப் பேசுவோமா? சில நாள்களுக்கு முன் ஐநா சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், தண்ணீரே இல்லாமல் நாடு திவாலாகப் போகிறது என்ற அந்தக் கட்டுரையைப் படித்தபோது மனதில் பகீரென்று இருந்தது. தமிழ்நாட்டில் இன்னும் கொஞ்சம் காலத்திலேயே தண்ணீர் இல்லாமல் திவாலாகப் போகிறதாம். அதற்குக் காரணம், நிலத்தடி நீரைப் பாதுகாக்காதது. மண்ணையும் மணலையும் கொள்ளை அடித்தால், மலைகளை விழுங்கினால், கனிம வளங்களைக் கொள்ளையடித்தால் வேறு என்ன நடக்கும்? மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது சரியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதை மறந்துவிட்டீர்களா? இதற்கெல்லாம் காரணம் மணல் மாஃபியா கும்பல்தான் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சொன்னதே அதை மறந்துவிட்டீர்களா? இந்த மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவு அளிப்பது திமுக அரசாங்கம்தானே இதை மறுக்க முடியுமா? உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகப் போகிறது.

ஐந்தாண்டுக்குள் திட்டங்கள் நிறைவேற்றம்

தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை இணைப்போம். இந்தியாவில் நாங்கள்தான் அதை முதலில் யோசித்தோம் என்று பெருமையாகச் சொல்லும் திமுகவின் நேக் என்ன என்று சொல்லட்டுமா? இதுபோன்ற பெரிய பெரிய திட்டங்களையெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் செய்ய மாட்டார்கள். ஆட்சி முடியும்போது அதற்கான திட்டத்தைக் கொண்டு வருவார்கள். அதன்பின் தேர்தல் வரும், அதில் தோற்றுவிட்டு எங்கள் ஆட்சி முடிந்துவிட்டதே என்று நாடகம் ஆடுவார்கள். மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது தானே. அதென்ன ஆட்சி முடியும்போது அடிக்கல் நாட்டுவது? தவெக ஆட்சி அமைந்ததும் பெரிய பெரிய திட்டங்களை உடனே தொடங்குவோம். ஐந்து ஆண்டுகளுக்குள் அதை முழுமையாக நிறைவு செய்யவும் முயல்வோம்.

மீனவர்களின் பாதுகாப்பில் முக்கியத்துவம்

கடல் விவசாயிகளான மீனவர்களின் பிரச்னைகளுக்கு அவ்வப்போது எழுந்து கடிதம் எழுதிவிட்டுத் தூங்கப் போய்விடுவார். அதன்பின் அது அப்படியே இருக்கும். மானே, தேனே, பொன்மானே என்று கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கே ஆகாது. மத்திய அரசுக்கு உண்மையான, உணர்வுப்பூர்வமான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். நம் மீனவர்கள் மீது யாரையும் கையே வைக்க விடக் கூடாது. அவர்களுக்கான பாதுகாப்பு பக்காவாக இருக்க வேண்டும். அதுதான் நமது ஒரே குறிக்கோள். மீனவர்களே, அடுத்து நமது ஆட்சிதான். கவலைப்படாதீர்கள். உங்களுக்கான பாதுகாப்பு பக்காவாக இருக்கும். அடுத்து நாங்கள்தான் என்று ஸ்டாலின் சார் சொல்லுவார். அதெல்லாம் நடக்காது. சீனப்பெருஞ்சுவரின் நீளத்தை விடப் பெரிய விஷயம் இரண்டாவது முறை திமுக ஆட்சிக்கு வருவது. அவர் அப்பாவான கருணாநிதியாலேயே முடியவில்லை.

விஜயை முடக்க கூட்டு சதி

அரசியலுக்கு வந்தால் கலெக்‌ஷன் பார்க்கலாம் என்பது உண்மையான அரசியல் கிடையாது. இது நமக்குத் தெரியும். அதனால்தான் நம்மைச் சுற்றி அத்தனை சதிகள், அதில் முக்கியமான சதி என்ன தெரியுமா? ”இதோ பார், ஒன்று நீ, இன்னோன்று நான். நமக்குள் வேறு யாரும் வந்துவிடக் கூடாது. நம்மால் மட்டும்தான் மக்களை சுலபமாக ஏமாற்ற முடியும். விஜய் வந்ததால் நமக்கு பிழைப்பே போய்விட்டது. நாம் வெளியே அடித்துக்கொண்டாலும் உள்ளுக்குள் நம் டீலிங் மிகவும் முக்கியம். நமக்கு மக்களின் உணர்வுகள் (ஃபீலிங்) முக்கியமில்லை. விஜயை நீ வழிகாட்டு விதிமுறைகள் என்ற பெயரில் தடுத்துவிடு. நான் அவன் மீது பழியைப் போட்டுத் தடுக்கிறேன். டீலிங் ஓக்கேவா?” என்று பேசிக்கொள்கிறார்கள். உண்மையிலேயே இப்படித்தான் இருக்கிறது அவர்கள் டீலிங் எல்லாம். சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பழி மேல் பழி போட்டு, கரூரில் தொடங்கி, ஜனநாயகன் வெளியீடு வரை செய்தார்கள். ஆனால் ஜனநாயகன் வெளியீட்டிற்கு நிறைய பேர் குரல் கொடுத்தார்கள். குறிப்பாக நம் முதலமைச்சர் பூசி, மெழுகி, பட்டும் படாமல் குரல் கொடுத்தார்.

முதலமைச்சரின் மனநிலை

நாம் வெளிப்படையாகப் பேசுவதால் முதலமைச்சரின் மனநிலை இப்போது எப்படி இருக்கும் தெரியுமா? ஏற்கெனவே கட்சிக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. தூங்க விடமாட்டேன் என்கிறார்கள். விஜய் வேறு தூங்க விடமாட்டேன் என்கிறான். நாம் நெடுஞ்சாலையில் சைக்கிளில் தனியாகப் போகலாம் என்று நினைத்தோம். விஜய் மக்கள் சக்தியோடு வந்து தானும் கேள்வி கேட்டு, மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறான். ரூ. 1000 கொடுத்துக் கொண்டிருந்தோம். ரூ. 5000 கொடுத்து ஏமாற்றலாம் என்றால் அதற்கும் கேள்வி கேட்க வைக்கிறான். விசில் சத்தம் விண்ணை முட்டுகிறது. கூட்டணிக் கட்சிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. விஜயின் பிரசாரத்தையாவது முடக்கலாம் என்று பார்த்தால் அப்போதும் மக்கள் அவன் பின்னால் நிற்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த மனநிலையில்தான் அவர் இருப்பார்.

முன்மாதிரி அல்ல, மோசடி ஆட்சி

தென் தமிழ்நாட்டில் ஓர் ஊரில் உங்கள் அப்பாவுக்கு வெண்கல சிலை வைக்க திட்டமிட்டதற்கு உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? மக்கள் பணத்தில் யாருக்குப் புகழ் பாடப் பார்க்கிறீர்கள் என்று கேட்டார்கள் அல்லவா! அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு இனிப்பு செய்யாதீர்கள் என்று அர்த்தம். மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னையைச் சொன்னால் நிதிச்சுமை நிதிச்சுமை என்று சொல்கிறீர்கள். சிலை வைப்பதற்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது? சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாணியமாக ரூ. 1000 தருகிறேன் என்று சொன்னீர்களே, என்னாச்சு? கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4,000 தருவதாகச் சொன்னது என்னாச்சு? ரொம்ப நாள் கல்யாணமே ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு, கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை தருவதாகச் சொன்னீர்களே, என்னாச்சு? இதெல்லாம் சாம்பிள்தான். முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. மாநில அரசால் முடியவே முடியாது என்று தெரிந்துகொண்டு, நாங்கள் வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்றீர்களே. ஆஹா எவ்வளவு பேரிய மோசடி இது. கேட்டால் நாங்கள் முன்மாதிரி ஆட்சி என்பார்கள். இது மோசடி ஆட்சி. திருநெல்வேலியில் நாங்குநேரியில் சமீபத்தில் சம்பவம் ஒன்று நடந்தது. அதைப்பற்றி நண்பர் ஒருவர் ட்வீட் போட்டிருந்தார். “ஸ்டாலின் தொடரட்டும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்” என்று பதிவிட்டிருந்தார். இதுதான் அந்தப் பிரச்னைக்கு ஒரே வரியில் கருத்து.

தேர்தல் வாக்குறுதிகள் அல்ல

இப்போது நான் சொல்வது தேர்தல் வாக்குறுதிகள் அல்ல. நம்மை நம்பி இருப்பவர்களுக்குச் சொல்லும் நம்பிக்கை.

  • தவெக ஆட்சியில் உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

  • 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை 50% ரத்து செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.

  • திமுக போல் எல்லாருக்கும் என்று சொல்லிவிட்டு, பின் தகுதி நிர்ணயம் செய்து ஏமாற்றாமல் அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்வோம்.

  • 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயிகளின் குடும்பத்தில், மத்திய, மாநில அரசு ஊழியர்களாக பணி செய்யாமல் இருந்தால், அவர்களின் குழந்தைகளின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வித படிப்புகளுக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

  • விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ள திட்டங்களை, மத்திய அரசின் நெருக்கடியே இருந்தாலும் தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும்.

  • கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் முறையாகப் பாதுகாக்கப்படும். நெல் மூட்டைகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளப்படும். போதுமான கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். நெல் கொள்முதல் செய்யப்படும்போது ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். மீறி வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • 500 ரேஷன் அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்குப் பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும். ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.

  • மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உண்மையான, உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை தவெக அரசு கொடுக்கும்.

  • அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமன்றி, தனியார் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தாலே, நம் இளைஞர்கள் அவர்களது வழியை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.

  • பல கோடிகளில் ஒப்பந்தம் என்று விளம்பரம் மட்டும் செய்யாமல், உண்மையான ஒப்பந்தங்களை மேற்கொண்டு, அது தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதைச் செயல்படுத்தினாலே எல்லாம் தானாக நடக்கும்.

  • தவெக ஆட்சிக்கு வந்ததும் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியைக் கொடுக்க முயன்றாலே போதும் எல்லாம் நன்றாக நடக்கும்” என்றார்.

DMK winning a second term in Tamil Nadu is not possible even for Karunanidhi. Tamil Nadu itself has become bankrupt under DMK rule, said Tamilaga Vettri Kazhagam leader Vijay in a speech in Thanjavur.