தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

31 நாள்களுக்குப் பின் விஜய் அதிரடி அறிக்கை | TVK Vijay |

செப்டம்பர் 27 கரூர் சம்பவம் நடைபெற்ற நிலையில் 31 நாள்கள் கழித்து விஜய் அறிக்கை...

கிழக்கு நியூஸ்

டெல்டா மாவட்டங்களில் நெல் மணிகள் முளைத்து விவசாயிகள் அவதியடைந்துள்ளது குறித்து கரூர் சம்பவத்திற்குப் பிறகு 31 நாள்கள் கழித்து விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். சம்பவம் நடந்த அன்று விரைந்து சென்னை திரும்பிய விஜய், அடுத்தநாள் அதுகுறித்து வருத்தம் தெரிவித்து சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன்பின் மூன்று நாள்கள் கழித்து செப்டம்பர் 30 அன்று உருக்கமாகப் பேசி காணொளி வெளியிட்டார்.

பின்னர் கடந்த அக்டோபர் 13 அன்று கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது “நீதி வெல்லும்” என்று மட்டும் விஜய் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில் நேற்று (அக்.27) கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சென்னைக்கு வரவழைத்து விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக அவரைச் சந்தித்து ஊருக்குத் திரும்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் சம்பவம் நடந்து 31 நாள்கள் கழித்து இன்று நெல் கொள்முதல் குறித்து திமுக அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை விஜய் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று, பணத்தைக் கையில் பார்த்துவிடாமல் தடுப்பதே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது.

வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமை பேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில வினாக்கள்,

டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன?

பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அதிக மழைப் பொழிவு இருந்தாலும் விவசாய நிலத்தில் பயிர்கள் மூழ்காதபடி போதுமான தண்ணீரைத் தவிர்த்து, அதிகப்படியான தண்ணீர் விவசாய நிலங்களில் இருந்து தானாகவே வெளியேறி, சேமித்து வைக்கப்பட வேண்டிய நீர்நிலைகளைச் சென்றடைய, போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?

விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்ல முறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே. நெல் உள்ளிட்ட தானியங்கள் வீணாகட்டும், விவசாயிகளின் வாழ்வு பாதிக்கப்படட்டும். அதனால் நமக்கென்ன? என்று தெரிந்தே ஒவ்வோர் ஆண்டும் கடந்து போகிறதா இந்த அரசு?

விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, வெகுஜன மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி!

வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது. எனவே இனியேனும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். அத்தோடு பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

TVK Leader Vijay has released a statement 31 days after the Karur incident regarding the distress faced by farmers in the delta districts due to sprouting of paddy grains.