கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காணொளி வாயிலாகப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் யாரும் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்திக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் உள்ளன. விஜயும் கரூரிலிருந்து திருச்சி சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் உடனடியாக சென்னை திரும்பியது விமர்சனத்துக்குள்ளானது. இரு நாள்களுக்குப் பிறகு இச்சம்பவம் தொடர்பாக காணொளி வாயிலாக மௌனம் கலைத்தார் விஜய்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ. 20 லட்சத்தை, அம்மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாமதம் இருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விஜய் காணொளி வாயிலாகப் பேசியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, திங்கள் மற்றும் செவ்வாயன்று விஜய் பேசியிருக்கிறார்.
ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரியும் தவெக கொள்கை பரப்புச் செயலாளருமான அருண்ராஜ் தலைமையிலான குழு ஒன்று சென்னையிலிருந்து கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. காந்திகிராமம், பசுபதிபாளையும் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 குடும்பங்கள் வரை சந்தித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சந்திரா (40) என்பவர் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய உறவினர் பி. செல்வராஜ் என்பவர் விஜய் காணொளி வாயிலாகப் பேசியதை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் உறுதி செய்துள்ளார். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது, ஈடுசெய்ய முடியாத இழப்பு என விஜய் பேசியதாகக் கூறப்படுகிறது. நேரடியாக வந்து சந்திப்பதாக பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Karur Stampede | Vijay | TVK Vijay | Karur |