கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கரூரில் கடந்த சனிக்கிழமை மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டம் நடத்தினார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தலா ரூ. 20 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் உடனடியாக சென்னை திரும்பியதும் கரூர் செல்லவில்லை என்றும் மக்களைச் சந்திக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தான் வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜய்.
வீடியோவில் விஜய் பேசியதாவது:
"அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு வேதனை மிகுந்த சூழ்நிலையை நான் எதிர்கொண்டது கிடையாது. என் மனசு முழுவதுமாக வலி. வலி மட்டும் தான். இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரேயொரு காரணம் தான். அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு, பாசம். அந்த அன்புக்கும் பாசத்துக்கும் என்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதனால் தான், இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் கடந்து, மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யக் கூடாது என்பது தான் என் மனதில் மிக ஆழமாக இருக்கும். அதனால்தான், இந்த அரசியல் காரணங்கள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு, ஒதுக்கி வைத்துவிட்டு, மக்களின் பாதுகாப்பை மட்டும் கருத்தில்கொண்டு, அதற்கான இடங்களைத் தேர்வு செய்து, அதற்கான இடங்களைப் பார்த்து அனுமதி கேட்டு, காவல் துறையிடம் கோரிக்கை வைப்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே.
அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது, என்னால் எப்படி அந்த ஊரைவிட்டுக் கிளம்பி வர முடியும். நான் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால், அதை ஒரு காரணமாகக் காட்டி, அங்கு வேறு சில பதற்றமான சூழல்கள், வேறுசில அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று தான் அதைத் தவிர்த்தேன்.
இந்த நேரத்தில், உறவினர்களை இழந்து தவிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தெரியும். என்ன கூறினாலும் இது ஈடாகாது எனத் தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் நான் சந்திக்கிறேன்.
இந்த நேரத்தில், எங்களுடைய வலிகளையும், எங்களுடைய நிலையையும் புரிந்துகொண்டு, எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகளைச் சார்ந்த நண்பர்கள், தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களுக்குப் பிரசாரத்திற்குச் சென்றோம். இதுமாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையை எல்லாம் வெளியில் சொல்லும்போது, எனக்குக் கடவுளே நேரில் வந்து இறங்கி அந்த உண்மைகளை எல்லாம் சொல்வது போலத் தோன்றியது. விரைவில் எல்லா உண்மைகளும் வெளிவரும்.
எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் சென்று பேசி வந்தோம். அதைத் தாண்டி எங்களுடைய தரப்பில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. எந்தத் தவறும் செய்யவில்லை. இருந்தாலும், எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல சமூக ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள், தோழர்கள் மீது வழக்குப்பதிந்து அவர்களையெல்லாம் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் சார், உங்களுக்கு ஏதாவது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
நண்பர்களே, தோழர்களே... நம் அரசியல் பயணம் இன்னும் வலிமையாக, இன்னும் தைரியத்தோடு தொடரும். நன்றி!" என்று விஜய் பேசியுள்ளார்.
TVK Vijay | Karur | Karur Stampede | Vijay |