தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாமல், கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்து, மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கவேண்டாம், உங்கள் எண்ணம் ஒருபோது ஈடேறாது என்று பிரதமர் மோடியை குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் விஜய் பேசியதாவது,
`பிரதமர் மோடி அவர்களே தெரியாமல்தான் கேட்கிறோம் நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நன்மை செய்யவா அல்லது நமது இஸ்லாமிய நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் எதிராக சதி செய்யவா? மக்களுக்கு உங்களிடம் கேட்க ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.
அவர்களின் பிரதிநிதியாக உங்களிடம் சில கேள்விகளை கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன். நமது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகிறார்கள். எங்கள் மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மட்டும் இலங்கையிடம் இருந்து மீட்டுக்கொடுங்கள் அதுபோதும்.
உங்களுடைய முரட்டு பிடிவாதத்தால் நடத்தப்படும் நீட் தேர்வால் இங்கு என்னென்ன நடக்கிறது என்பதை சொல்லவே மனது வலிக்கிறது. எனவே நீட் தேர்வு தேவையில்லை என்று அறிவித்துவிடுங்கள் அது போதும்.
எங்களுக்குத் தேவையானதை, நல்லதை செய்ய மறுக்கிறீர்கள், ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களவை ஏமாற்ற நேரடியாக பாசிச பாஜக அடிமைக் கூட்டணி ஒன்று, உங்களுடைய மைனாரிட்டி ஆட்சியை ஓட்ட மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ். அடிமை, குடும்பம் என்று மற்றொரு கூட்டணி.
மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிப்பணிய வைத்து 2029 வரை சொகுசுப் பயணம் மேற்கொள்ள திட்டம் தீட்டியுள்ளீர்கள். ஒன்று மட்டும் கூறுகிறேன் என்னதான் நீங்கள் கூட்டணிக்காக குட்டிக்கரணம் போட்டாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்.
ஒரு எம்.பி. இடம் கூட கிடைக்கவில்லை என்பதால் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்கிறது மத்திய பாஜக அரசு. கீழடியில் கிடைத்த ஆதாரங்களை மறைத்து எங்களது நாகரீகத்தை, வரலாற்றை அழிக்க உள்ளடி வேலை செய்கிறீர்கள்.
எங்கள் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கவேண்டாம். உங்கள் எண்ணம் ஒருபோது ஈடேறாது’ என்றார்.